இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறி எதுவும் இல்லை. அதனால் தங்களுக்கு டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோயின் தாக்கம் இல்லை என்று எண்ணியிருக்கிறார்கள். உண்மையில் 100 பேருக்கு சர்க்கரை நோய் பாதித்திருந்தால் அதில் 50 பேருக்குத்தான் அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீரென்று உடல் எடை குறைதல், அதிகளவில் தண்ணீர் தாகம் எடுத்தல் போன்ற பொதுவாக அறிகுறிகளை காட்டுகிறது. மீதமுள்ள 50 பேருக்கு எந்த அறிகுறியும் காட்டுவதில்லை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

அத்துடன் ஒவ்வொருவரும் 30 வயதைக் கடந்தவுடன் ஆண்டுதோறும் ஒரு முறையாவது தங்களின் இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும். அளவில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை சந்தித்து தேவையான ஆலோசனைகளையும், உரிய சிகிச்சைகளையும் பெறவேண்டும். அப்போது தான் அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். இதனை அலட்சியப்படுத்திவிட்டால் சர்க்கரைநோய் பாதிப்பு வரும். பிறகு இதனுடன் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உயர்வு, இதன் காரணமாக உடற்பருமன், இதன் காரணமாக அஜீரணம் பிறகு இதய பாதிப்பு பிறகு சிறுநீரக பாதிப்பு பிறகு கண் பார்வை பாதிப்பு என ஒவ்வொன்றாக வந்து உங்களுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும். அதனால் தவறாமல் இரத்த சர்க்கரையின் அளவை கண்டறிந்து, அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். அறிகுறிக்காக காத்திருக்கக்கூடாது. 

டொக்டர் தர்மராஜன்

தொகுப்பு அனுஷா.