மனோ, ரிஷாத், ஹக்கீம் ஆகியோரின் கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க  தீர்மானித்துள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர்  மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன பிரதமருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளதிருக்க ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஷி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கப் போவதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது வரை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புத் தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.