6600 வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி (கொமன்வெல்த் விளையாட்டு) இன்று அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டு விழா இம்முறை 21ஆவது தடவையாக கோல்ட் கோஸ்டில் நடைபெறுகின்றது. அவுஸ்திரேலியா இம்முறை ஐந்தாவது தடவையாக இந்தத் தொடரை நடத்துகின்றது. இதற்கு முன்னர் 1938ஆம் ஆண்டு சிட்னியிலும், 1962ஆம் ஆண்டு பேர்த்திலும், 1982ஆம் ஆண்டு பிரிஸ்பேரினிலும். 2006 ஆம் ஆண்டு மெல்பேர்னிலும் நடத்தியுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக
வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆண் மற்றும் பெண் இரு பிரிவுகளிலும் சமமான பதக்கங்களை வழங்கும் முறையை கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆண்கள் பிரிவுகளிலேயே அதிகளவான தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இம்முறை சரி சமமாக இந்த பதக்க எண்ணிக்கைக்குரிய போட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டித் தொடரிலும் கூட இந்த சம பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன்படி இம்முறை மொத்தம் 275 தங்கப்பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இதில் 133 ஆண்கள் போட்டிகளும் 133 பெண்கள் போட்டிகளும் நடத்தப்பட்டு 133 பதக்கங்கள் வீதம் இருபாலாருக்கும் சரிசமமாக வழங்கப்படவுள்ளன. ஏனைய 9 பதக்கங்கள் இருபாலாரும் பங்கேற்கும் கலப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் வாய்ப்பை
தட்டிப்பறித்த கோல்ட் கோஸ்ட்
2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவை எந்த நகரில் நடத்துவதென்ற போட்டியில் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரமுமே மோதின. இதில் ஹம்பாந்தோட்டை நகரம் 27 வாக்குகளைப் பெற கோல்ட்கோஸ்ட் நகரம் 43 வாக்குகளைப் பெற்று போட்டி வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்துக்கொண்டது.
வரலாறு
கொமன்வெல்த் போட்டிகளானது முதன்முதலில் பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என்ற பெயரில் 1930 ஆம் ஆண்டு ஹெமில்டனில் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு 1954ஆம் ஆண்டு இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்று மாற்றம்பெற்றது. மீண்டும் 1970ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. அதன்பிறகு 1978 ஆம் ஆண்டு முதல் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரால் அதிகார பூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 71 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐக்கிய இராச்சியம் நான்கு அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாட்டு அணியாக கலந்துகொள்ளும் ஐக்கிய இராச்சியமானது இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவையாக பிரிந்துள்ளது. அதேபோல் அவுஸ்திரேலியாவும் இரண்டு அணிகளை அனுப்புகின்றது. அதேபோல் நியூஸிலாந்து அணிகள் இரண்டும் கலந்துகொள்கின்றன.
ஆரம்பவிழா
கோல்ட்கோஸ்ட் நகரின் கராரா மைதானத்தில் இன்று அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 8 மணிக்கு 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பவிழா நடைபெறவுள்ளது. ஆரம்ப விழாவில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
1930 ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டுவரை நாடுகளின் அணி வகுப்பில் பிரித்தானிய ஒன்றியக் கொடியை ஏந்திச் செல்லும் ஒருவர் மட்டுமே முன் செல்வார். அது பிரித்தானியப் பேரரசில் பிரிட்டனின் முதன்மையான இடத்தை அடையாளப்படுத்தியது. அதன்பிறகு அந்த மரபில் மாற்றம் செய்யப்பட்டது.
1958ஆம் ஆண்டிலிருந்த பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தொடக்க விழா நடைபெறும் இடம்வரை தடகள வீரர்கள் கோல் ஒன்றினை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கோலினுள்ளே தடகள வீரர்களுக்கான ராணியின் வாழ்த்துச் செய்தி இருந்துள்ளது. கோலினை கடைசியாக ஏந்திச் செல்பவர் வழக்கமாக போட்டியினை நடத்தும் நாட்டின் பிரபல வீரராக இருப்பார்.
தொடக்க விழாவில் அனைத்து நாடுகளும் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணிவகுத்து செல்லும். அத்தோடு இதற்கு முன் போட்டிகளை நடத்திய நாட்டு வீரர்கள் அணி வகுப்பில் முத லாவது அணியாகச் செல்வார்கள். அதேபோல் தற்போது தொடரை நடத்தும் நாடு கடைசி அணியாக அணி வகுப்பில் கலந்துகொள்ளும்.
இலங்கை அணி
இம்முறை இலங்கை 13 வகையான போட்டிகளில் பங்குபற்றுகின்றது. இதற்கு மொத்தம் 80 வீரர்கள் வரை வருகை தந்துள்ளனர். பயிற்சியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 150 பேர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
இதில் மெய்வல்லுநர் போட்டிகளில் 13 வீரர்களும், பளுதூக்கல் போட்டிகளில் 11 பேரும், மல்யுத்தம் 6, எழுவர் றக்பி 12 வீரர்களையும் கொண்ட அணிகளே அதிக வீரர்களை உள்ளடக்கி இம்முறை போட்டிகளில் கலந்துகொள்கின்றன.
இன்றைய ஆரம்ப விழா அணிவகுப்பில் இலங்கைக் கொடியை ஏந்திச் செல்லப்போவது பளுதூக்கல் வீரரான சிந்தன கீதால் விதானகே. இவர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பளுதூக்கல் பிரிவில் தங்கப்பதக்கம் ஒன்று வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சபட்ச பாதுகாப்பு
குயிண்ட்ஸ்லான் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1000 இற்கும் அதிகமான விசேட பாதுகாப்பு படையினரும், 3500 பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தோடு ஜெட் வகை யுத்த விமானங்கள் (Fighter Jets) மற்றும் ட்ரோன் துப்பாக்கிகளும் (Drone guns) பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போட்டிகளுக்காக உலக நாடுகளிலிருந்து 6 இலட்சத்து 72 ஆயிரம் பேர் வரை வருகை தரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
வீரர்கள் தங்கியுள்ள விளையாட்டு கிராமத்திற்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கிராமத்திற்குள் அனுமதியற்ற யாருமே நுழைய முடியாதவகையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு கிராமத்திற்கு மேலாக விமானங்கள் ஹெலிகொப்டர்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கெமராக்கள் எனப்படும் பறக்கும் கெமராக்களை விளையாட்டு கிராமத்திற்கு மேலாக பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறந்தால் சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காலநிலை குறித்து அச்சம்
இன்றைய ஆரம்பவிழாவிற்கு மழையினால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நாளிலும் இடையிடையே மழை பெய்துகொண்டிருந்தது. இதே காலநிலை இன்றும் தொடரும் பட்சத்தில் ஆரம்ப விழா நிகழ்வுகள் பாதிக்கக்கூடும். விழா நடைபெறவுள்ள கராரா மைதானத்தில் 35 ஆயிரம் பேர்வரையில் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மழை பெய்தால் அதில் 5000 பேருக்கு மட்டுமே கூரையுடன் கூடிய இருக்கைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய விளையாட்டு விழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இதில் மொத்தம் 25 வகையான விளையாட்டு பிரிவுகளில் 275 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரையில் நடைபெற்றுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலின் அடிப்படையில் 852 தங்கப்பதக்கங்களுடன் 2218 மொத்தப் பதக்கங்களைப் பெற்று அவுஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 669 தங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், கனடா 469 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM