காணாமல்போன மகளை 24 வருடங்களிற்கு பின்னர் தந்தை கண்டுபிடித்த மனதை உருக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

24 வருடங்களிற்கு முன் தனது மகளை தொலைத்த மிங்கிங் தனது மகளை கண்டுபிடிப்பதற்காக டாக்ஸி ஓட்டுநராக தொழில்புரிந்துள்ளார்.

பழங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மிங்கிங் 24 வருடங்களிற்கு முன்னர் தனது மூன்று வயது மகளை தொலைத்துள்ளார்.

24 வருடங்களிற்கு முன்னர் வீதியோரத்தில் தாங்கள் பழங்களை விற்றுக்கொண்டிருந்த வேளை  மகள் தீடிரென காணாமல்போனாள் என அவர் தெரிவிக்கின்றார்.

அதன் பின்னர் அவர் தனது மனைவியுடன் இணைந்து மகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பல விளம்பரங்களை வெளியிட்டுள்ளார்.இணையத்திலும் விளம்பரம் செய்துள்ளார்.

2015 இல் மகளை கண்டுபிடிப்பதற்காக நிறுவனமொன்றில் வாகனச்சாரதியாக சேர்ந்துள்ளார். அவர் தன்னிடமிருந்த மகளின் சிறுவயது புகைப்படத்தை காண்பித்து துண்டுபிரசுரங்களை வெளியிட்டுள்ளார். சீனாவின் பொலிஸாரும் அவரின் முயற்சிக்கு உதவியுள்ளனர்.

கடந்த வருடம் பொலிஸ் துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் மிங்கிங்கின் மகள் தற்போது எப்படியிருப்பார் என்பதை ஓவியமாக வரைந்துள்ளார் . அந்த படத்தை மிங்கிங் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

மிங்கிங் வாழ்ந்த பகுதியிலிருந்து ஆயிரம் கிலோமீற்றருக்கு  அப்பால் உள்ள பகுதியில் காங் சிங் என்ற பெண்மணி அந்த படத்தில் இருப்பவர் தன்னை போன்றே காணப்படுவதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பொலிஸ் துறையைச் சேர்ந்த அந்த ஓவியரை தொடர்புகொண்டுள்ளார். அதன் பின்னர் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக இடம்பெற்றுள்ளன.

இறுதியில் மரபணு பரிசோதனை மூலம் காங் சிங் 24 வருடத்திற்கு முன்னர் காணாமல்போன மகள் என்பது உறுதியாகியுள்ளது.செவ்வாய்கிழமை கண்ணீருடன் தந்தையும் மகளும் 24 வருடங்களின் பின்னர் இணைந்துள்ளனர். மனதை உருக்கும் இந்த சம்பவம் சீனாவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.