(இரோஷா வேலு)

புராதன உரிமம் உடைய 7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையுடன் சந்தேகநபர் நால்வர் நேற்று இரவு புசல்லாவை பிரதேசத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த புசல்லாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

புசல்லாவ பிரதேசத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த புசல்லாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால், நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த காரொன்றினை தடுத்து பரிசோதனைக்குட்படுத்திய வேளையில், காரினுள்ளிருந்து புராதன உரிமம் உடைய 7 தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த காருடன் சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 30, 35 மற்றும் 40 வயதுகளை உடைய மாவத்தகம, எய்யந்துடுவ, நிட்டம்புவ மற்றும் கொத்மலையைச் சேர்ந்த ஆண்கள் நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்டப்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்யும் வேளையில் இவர்களிடமிருந்து புராதன உரிமம் உடைய ஏழு தலை நாகத்தை கொண்ட புத்தர் சிலையுடன், சந்தேகநபர்கள் பயணித்த கார் மற்றும் அசிட் போத்தல்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் இன்று கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.