பேஸ்புக்கில் பழக்கமான பெண்ணுடன் காதலர் தினத்தை கொண்டாடும் பொருட்டு சென்ற இளைஞனொருவன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் இந்தியாவின், குர்கானில் இடம்பெற்றுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 27 வயதான குறித்த இளைஞன் பேஸ்புக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான பெண்ணை சந்திக்கும் பொருட்டு குர்கானுக்கு சென்றுள்ளார்.

குறித்த பெண், அவ் இளைஞனை பொது இடத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

பின்னர் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தொடர்மாடி மனையான அங்கு இருவரும் வீட்டுக்குள் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, அங்கு வந்துள்ள அப்பெண்ணின் உறவினர் மற்றும் அவரது சாரதி இளைஞனைக் கண்டதும் ஆத்திரமடைந்துள்ளனர்.

பின்னர் அவ்விளைஞனை தாக்கி தொடர்மாடி மனையிலிருந்து கீழே வீசி படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தை விபத்தைப் போல மூடி மறைக்க முயற்சித்துள்ளனர்.