பாகிஸ்தானின் 78 ஆவது தேசிய தினத்தின் வரவேற்பு நிகழ்வுகள் இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தினால் கெழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த மார்ச் 29 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

முதன்மை தெழிற்துறை அமைச்சர் தயாகமகே இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

 

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தனது வரவேற்பு உரையில் 1947 ஆகஸ்ட் 14 திகதி பாகிஸ்தான் சுதந்திரம் பெறுவதற்கு துணைக்கண்டத்தின் முஸ்லிம்கள் மேற்கொண்ட தியாகங்கள் மற்றும் அரசியல் போராட்டத்தினை புகழ்ந்து உரையாற்றியதுடன், 1940 மார்ச் 23 தினத்தன்று நிறைவேற்றப்பட்ட லாஹிர் தீர்மானத்தினையும் இதன்பொழுது நினைவு கூறினார். 

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாகிஸ்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் மற்றும் அம்சங்களை தனது உரையில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் தெளிவுபடுத்தினார். 

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான  இருதரப்பு உறவுகள் குறித்து உயர் ஸ்தானிகர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

 

“பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன தக்க தருணத்திற்கான நண்பர்கள். இருநாடுகளிற்கிடையிலான உறவுகள் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளின் பொழுது  பரஸ்பர கௌரவம், பொதுப்பண்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களிலே நெருங்கிய உறவு ஆகியவற்றினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் தேசிய நிகழ்வுகளில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டமை இருநாடுகளிற்கிடையில் காணப்படும்  மூலோபாய ஒத்துழைப்பு மற்றும் வலுவான நட்புறவிற்கு சிறந்த சாட்சியாகும்”. 

இந்நிகழ்விலே உரையாற்றிய பிரதம அதித அமைச்சர் தயாகமகே கருத்துத்தெரிக்கையில், 

பாகிஸ்தான் இலங்கை ஆகியன எப்பொழுதும் பன்முகத்தன்மை, தாராளதன்மை, பரஸ்பர ஒத்துழைப்புடனான சுமூகமான நெருங்கிய உறவினை பேனுகின்றன. இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவமானது கலாச்சாரம், நாகரீகம் மற்றும் வர்த்தக உரையாடல் என்பவற்றினை மேம்படுத்துவதற்காக  சிறந்த முறையில் விருத்தியடைந்துள்ளது”.

கடினமான தருணங்களில் குறிப்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சியின்பொழுது பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட நிகரில்லா ஒத்துழைப்பிற்கு அமைச்சர் தயாகமகே தனது நன்றிகளை தெரிவித்தார். 

மேலும் உள்-நாட்டில் தேவைகாணப்பட்ட போதிலும் உரிய நேரத்தில் யூரியா உரத்தினை இலங்கைக்கு வழங்கிவைத்த பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு அமைச்சர் தயாகமகே தனது நன்றிகளை தெரிவித்தார்.  

இந்நிகழ்வின் பொழுது, பாகிஸ்தானில் பரவிய டெங்கு காய்ச்சலினை குணப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை வைத்தியர் லக்குமார் பெர்னான்டோவுக்கு பாகிஸ்தானின் வெகுமதிமிக்க “சித்தாரா-இ-கிஹித்மத்” சிவில் விருது பாகிஸ்தானிய ஜனாதிபதி சார்பாக இலங்கை உயர் ஸ்தானிகரால் வழங்கி வைக்கப்பட்டது. வைத்தியர் பெர்னாண்டோ இலங்கையின் புகழ்பெற்ற குழந்தை நல மருத்துவராகவும், டெங்கு மருத்துவ முகாமைத்துவம் மற்றும் டெங்கு காய்ச்சல் நிலையத்திற்கான தலைவராக  செயற்பட்டுவருகின்றார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிற்கான  பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் அதன் முகாமையாளர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் பாகிஸ்தான் தேசிய தினத்தினை நினைகூறும் கேக் பிரதம அதிதி அமைச்சர் தயாகமகே, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மற்றும் அமைச்சர்களால் வெட்டப்பட்டது.

சபாநாயகர் கருஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வணிகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஷ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள், இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம், வியாபார சபை மற்றும் இலங்கையின் பாகிஸ்தானிய முன்னாள் பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், பாகிஸ்தானிய பிரஜைகள் சமூக அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாரிய அளவிலான ஊடக பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.