“சுயவிருப்பிலேயே இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் மீள திரும்புகின்றனர்” - பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின் செவ்வி

Published By: Priyatharshan

02 Apr, 2018 | 02:45 PM
image

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களில் தற்போது வரை 61,671 வரையிலானவர்கள் 107 முகாம்களில் தங்கியுள்ளார்கள். இவர்களில் கட்டம் கட்டமாக தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்புகின்றார்களே என தென் இந்தியாவுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார். 

வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர். 

அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தற்போதைய உறவுகள் எவ்வாறுள்ளன?

பதில்:- பொதுவாகவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்றுக்காலம் முதலே இருதரப்பு உறவுகள் வலுவாக இருந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியான போக்கே தற்போதும் காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிறப்பாகவே உள்ளது. இன்றைய காலத்தில் அந்த பிணைப்பு மென்மேலும் வலுவானதான ஒன்றாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தற்போது மேம்பட்டுச் செல்கின்றன.

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் நான் சந்தித்துள்ளேன். அவர்களும் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். அத்துடன் தற்போது யாழ். நூலகத்திற்கு நூல்களை வழங்கும் அறிவிப்பினையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம் ஆகும்.

பொதுவாகவே அவர்கள் பல்வேறு விடயங்களில் கரிசனைகளை காட்டுகின்றார்கள். இருதரப்பு உறவுகள் நன்றாகவே உள்ளன. எதிர்காலத்தில் அவை மென்மேலும் அனைத்து மட்டங்களிலும் நெருங்கிய தொடர்புகளாக மாற்றமுறும் என்பதே எனது எதிர்பார்ப்பாகவுள்ளது. 

கேள்வி:- அசாதாரண சூழல் காரணமாக தாயகத்திலிருந்து வந்து அகதிகளாக தமிழகத்தில் முகாம்களில் உள்ளவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு திரும்புவது தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள்?

பதில்:- இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களில் தற்போது வரை 61,671 வரையிலானவர்கள் 107 முகாம்களில் தங்கியுள்ளார்கள். முகாம்களுக்கு வெளியில் 30 ஆயிரம் பேர் வரையிலானவர்கள் வசிக்கின்றார்கள்.

இதனைவிடவும் அண்மைய காலங்களில் படிப்படியாக சுய விருப்பின் பிரகாரம் 10 ஆயிரம் வரையிலானவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். இது வரையில் தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளை மீளவும் அழைத்துக் கொள்ளும் நோக்கிலான சிறப்பு மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் அவர்கள் தமது சுய விருப்பின் அடிப்படையில் கட்டம் கட்டமாக திரும்பி செல்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கைப் பிரஜைகள் எவரும் நாட்டினை விட்டு வெளியில் சென்று வசிப்பதற்கும் அது போலவே மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து வசிப்பதற்கும் உரிமை உடையவர்களாக இருக்கின்றார்கள்.

அதன்பிரகாரம் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி செல்வதற்கு விரும்புவர்கள் அங்கு சென்று குடியேறுகின்றார்கள். இன்னும் பலர் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய எதிர்பார்ப்பில் சில முன்முயற்சிகளை செய்து கொண்டு இருக்கின்றனர். இதனை விடவும் பெரும்பாலான மக்கள் தமது பொருட்கள் அனைத்தினையும் தாம் நாடு திரும்பும் போது மீளவும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகின்றார்கள். விமான சேவையில் பொதிகளுக்கான நிறை வரையறுக்கப்பட்டுள்ளமையால் அவர்களால் தமது உடமைகளை முழுவதுமாக கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆகவே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் அப்போது திரும்பலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் இலங்கையில் தற்போதும் மீள்குடியேற்றத்தினை முன்னெடுப்பதற்கான அமைச்சானது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

பல திட்டங்களை முன்னெடுப்பதாக அறிகின்றேன். அந்த நடவடிக்கைகளின் வெற்றியில் தான் தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளின் சொந்த மண்நோக்கிய மீள்திரும்பல் நிகழும். 

கேள்வி:- தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்கள் சார்ந்து சென்னை தூதரகத்தின் செயற்பாடுகள் எவ்வாறுள்ளன?

பதில்:- தற்போது தமிழகத்தில் முகாம்களிலும் வெளிப்பதிவிலும் வாழும் இலங்கையர்களுக்கு பிறந்த குழந்தைகள் தமது பெற்றோர் வழியில் இலங்கை பிரஜைகளாவர். ஆயினும் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த பிறப்பை பதிவு செய்வதற்காக, விண்ணப்பித்து அப்பிறப்பிற்குரிய கொன்சுயூலர் பிறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கும் அதன் வழியே இலங்கை குடியுரிமை சான்றிதழை பெறவும் உரித்துடையவர்கள்.

ஆகவே, இந்தியாவில் வசிக்கும் இலங்கை பெற்றோர்களுக்கு பிறந்த எல்லா குழந்தைகளின் பிறப்பினை பதிவு செய்ய ஒரு சிறப்பு திட்டத்தினை இத்தூதரகம் தயாரித்து அதனை அமுல் படுத்துகிறது. இதனடிப்படையில், பிறப்பு மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கிட ஒவ்வொரு புதன்கிழமை தோறும் சிறப்பு வேலை திட்டத்தின் மூலம் விசேட முகாம்களை தூதரகத்தில் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம். மேலும் தமிழக அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி முகாம் மேற்பார்வை ஊடாக இத்தகைய தேவைகள் உடையவர்கள் இனம் கண்டு, முறைமைப்படுத்தப்பட்டு காலக்கிரமமாக வரவழைக்கப்படுகின்றார்கள்.

அதன் பின்னர் அவர்களுக்குரிய ஆவணங்களை சரிபார்த்து அவர்களது பிறப்பு பதிவினை மேற்கொண்டு அவர்களுக்கு இலங்கை பிறப்பு சான்றிதழ்களை விரைந்து வழங்கி வருகின்றோம். கடந்த ஆண்டு மாத்திரம் 3520 பேருக்கான இலங்கை பிரஜாவுரிமையை வழங்கியுள்ளோம். இவ்வாண்டில் இன்று வரையில் 1500 வரையிலானவர்களுக்கு ஆவணத்தினை வழங்கியுள்ளோம்.

இலங்கை அரசின் நல்லிணக்க கொள்கையின் அடிப்படையில் இங்குள்ள அனைத்து இலங்கையரின் பிள்ளைகளின் பிறப்பினை கொன்சுயூலர் பிரிவில் பதிவு செய்து அதன் வழியாக தமது குடியுரிமையை பெற்றுக் கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம்.

உண்மையிலேயே இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அந்நாட்டு பிரஜைகளாக அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் மக்களாக தமிழகத்தில் உள்ள மக்களும் இருக்க வேண்டும் என்ற பேராவாவின் அடிப்படையில் நாம் அவர்களின் குடியியல் ஆவணங்கள் வழங்குவது தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றோம். இவை அனைத்துமே இலவசமாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுவதும் மிக முக்கியமான விடயமாகும்.

கேள்வி:- இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கான நிலைமைகள் எந்த மட்டத்தில் உள்ளன?

பதில்:- மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களின் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எதிர்காலத்தில் அவ்வாறான சேவை இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவுள்ளன. 

கேள்வி:- இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதிமுகாம்களில் அடிப்படைப் பிரச்சினைகள் காணப்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே?

பதில்:- தமிழக அரசானது தங்களால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் சேவைகளையும் இந்த மக்களுக்கு வழங்குகிறது. எமது அவதானிப்பின் பிரகாரம் உணவு, உறையுள், கல்வி மற்றும் பிற வசதிகள் இவர்களுக்கும் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. எந்தவொரு சமுகமும் தான் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறைமையின் அடிப்படையிலேயே மாற்றத்தினைக் காண்கின்றது. தமிழகத்தினைப் பொறுத்தவரையில் அனைவருமே முயற்சியாளர்களாகவே உள்ளார்கள்.

அதேபோன்று தான் முகாம்களில் தங்கியிருந்தாலும் அவர்களைச் சார்ந்தவர்கள் உயர்கல்வியைப் பெற்றுள்ளார்கள். பல்வேறு பதவிகளுக்காக தம்மை தயார் படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் 1951 ஆம் ஆண்டின் அகதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. அவ்வாறு இருக்கின்ற நிலையில் இந்திய அரசாங்கமானது ஒப்பந்தத்தில் கைச்சாத்தாவிட்டாலும் சர்வதேச அகதிகள் பாதுகாப்பு கடப்பாடுகளை பின்பற்றியே வருகின்றமையை அவதானிக்கலாம்.

கேள்வி:- வடக்கு கிழக்கு மலையக பகுதிகளில் காணப்படுகின்ற கணித விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி ரீதியான கற்கை நெறிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தமிழகத்தலிருந்து தகமையானவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பில் நடவடிக்கைகள் எதனையும் எடுத்துள்ளீர்களா?

பதில்:- அதுகுறித்த உத்தியோகபபூர்வமான அறிவிப்புக்கள் எவையும் எமக்கு கிட்டவில்லை. தமிழகத்தின் முகாம்களில் வாழும் மக்களில் பலர் உயர்கல்வியைக் கற்று பட்டப்படிப்புக்களையும் இதர மேற்படிப்புகளையும் கற்று தகமை உடையவர்களாக இருக்கின்றார்கள்.

மேலும் சிலர் ஆசிரியர் சேவைக்கான பட்ட பின்படிப்பினையும் நிறைவு செய்துள்ளார்கள். ஆகவே அத்தைகையவர்கள் இலங்கை மீள் செல்லும் போது அவர்களின் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப வாய்ப்புகள் உள்ளது.

கேள்வி:- இலங்கை தமிழர்கள் தொடர்பிலான தமிழக உணர்வாளர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு நிலை எவ்வாறு உள்ளது?

பதில்:- அவ்வாறானவர்கள் பலர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எம்மை சந்திக்கும் போது தமது கருத்துக்களை கோரிக்கைகளை முன்வைப்பார்கள். அவற்றை நாம் செவி மடுக்கின்றோம். அவர்களுடன் பொதுவாகவே நல்ல உறவு நிலையே காணப்படுகின்றது. 

கேள்வி:- பொதுவாக ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடர் காலங்களில் இலங்கை தூதரக முற்றுகை போராட்டங்கள் நடைபெறுகின்றவே அவ்வாறான நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்:- இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். சர்வதேச ரீதியாகவும் பொருத்தனைகளைக் கொண்டிருக்கின்றது. ஆகவே அதற்குட்பட்ட வகையிலேயே செயற்பட வேண்டியது கடமையாகின்றது. 

மேலும் தமிழகத்தினைப் பொறுத்தவரையில் பல்வேறு புத்திஜீவிகள் நவீன சிந்தனையாளர்கள் என பல்வேறு சமூக சிற்பிகள் தமது கருத்துக்களை முன்வைப்பார்கள்.

அதுபோலவே தமிழ் உணர்வாளர்கள் தமது கருத்துக்களை முன்வைப்பார்கள். ஜனநாயக நாடொன்றில் அதற்கான பூரண உரிமை அவர்களுக்கு உள்ளது. அவற்றை நாம் மதிக்கின்றோம். அவற்றில் உள்வாங்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

கேள்வி:- சுற்றுலாத்துறை கலை பண்பாடு போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:- சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையில் சிறப்பான நிலைமைகளே உள்ளன. விமான போக்குவரத்து சீரான முறையில் இடம்பெறுவதன் காரணமாக அத்துறையானது தொய்வின்றி சென்று கொண்டிருக்கின்றது. அதனைவிடவும் கலை பண்பாடு ரீதியாக பார்க்கின்றபோது இந்திய கலைஞர்கள் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றார்கள். நல்ல வரவேற்பும் கிடைக்கின்றது.

காரணம் அவர்கள் உலகளாவிய பெருமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இதனை விட எமது கலைஞர்களின் கலை பண்பாட்டு விடயங்கள் தமிழகத்தில் அரங்கேறும் சூழ்நிலையை படிப்படியாகவே ஏற்படுத்த முடியும். கலாச்சார ஒத்துழைப்பு என்பது மக்களை இணைக்கும் ஒரு பாலமாகும். எமது தூதரகத்திலேயே அதற்காக கலையரங்கை கூட ஸ்தாபித்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் அந்த விடயங்களை மேலும் முன்னேற்றகரமாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

கேள்வி:- உயர் மருத்து சிகிச்சைகளுக்காக வரும் இலங்கையர்களுக்கு எவ்வாறான அனுசரணைகளை வழங்குகின்றீர்கள்?

பதில்:- இலங்கையிலிருந்து மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் உயர் சிகிச்சைகளுக்கு இங்கு அதிகளவானவர்கள் வருகின்றார்கள். குறிப்பாக மாற்று அறுவைச் சிகிச்சைகள் போன்றவை இந்திய சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவையாகும். ஆகவே அவ்வாறானவற்றை தாமதமின்றி பரிசீலனை செய்து உரிய அத்தாட்சி பாத்திரங்களை வழங்கி வைத்தியசாலைக்கு வழங்குவதன் மூலம் சிகிச்சை நாடி வரும் இலங்கையர்கட்கு இத்தூதரகம் உறுதுணையாக உள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை ஜனாதிபதி நிதியம் மூலம் சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர்களது நிதியினை உறுதிப்படுத்தி குறித்த நேரத்தில் சிகிச்சை தாமதமின்றி கிடைத்திட உதவி புரிகின்றோம்.

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-20 16:18:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11
news-image

இந்தியாவின் தடை நீடிப்பு - இனவாதிகளுக்கு...

2024-05-19 18:28:36
news-image

சம்பந்தனின் அர்த்தமற்ற கோரிக்கை

2024-05-19 18:27:54
news-image

போரில் தோற்கிறதா உக்ரேன்?

2024-05-19 18:27:20
news-image

தமிழர் நலனை கை கழுவும் இந்தியா

2024-05-19 18:26:52
news-image

சிறந்ததொரு அரசியலுக்காக தயார் செய்யப்படவேண்டிய அடுத்த...

2024-05-19 18:26:12
news-image

அமெரிக்கா அனுப்பும் இன்னொரு ‘ஜூலி’

2024-05-19 18:25:02