'எவையெல்லாம் இயல்பு நிலையிலிருந்து விலகியவையாக அறியப்படுகின்றதோ, அவையே தனித்துவமானவை" பார்த்தவுடன் இருபது வயது என மதிப்பிடத்தக்க வகையிலான தோற்றம், சாதாரணவர்களை விடவும் ஒருவித வசீகரம், புதியவர்களை கண்டதும் கண்களில் மிரட்சியுடனும் ஆவலுடனும் நெருங்குகிறார்கள், பின் விலகிப்போகிறார்கள், சத்தமாக பாடுகிறார்கள், உடனே நிறுத்துகிறார்கள், குதூகலிப்புடன் சிரிக்கிறார்கள்... நிச்சயமாக அது வேறு உலகம் தான்! மென்ஹன்டி ஸ்கூல், விசேட தேவையுடையோர் பாடசாலை.

ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் ஆகிய உளநல மற்றும் மூளை வளர்ச்சி குன்றல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாக இயங்கும் திறனையும், கல்வியையும் வழங்கும் வகையில் களுபோவில சுஜாதா மாவத்ததையில் இயங்கும் பாடசாலையே மென்ஹன்டி ஸ்கூல். பாடசாலைக்குரிய பாரிய கட்டடங்கள், ஆடம்பரம் ஏதுமின்றி மனதுக்கு நெருக்கமான வகையிலான வீட்டுச்சூழல், பொறுமையோடு ஆதரவாக கற்பிக்கும் ஆசிரியர்கள், அவரவர் தனித்திறனை இனங்கண்டு ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு என விசேட தேவையுடையோரின் நலன்கருதி செயற்படும் மென்ஹன்டி ஸ்கூல் மனதில் நிலைக்கிறது.

எப்போதும் சிரிப்புடனும், குதூகலத்துடனும் இருகின்ற ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடைய அந்த மாணவர்கள் ஜீவனற்ற ஓர் கட்டடத்தை ஆசீர்வதிக்கப்பட்ட உலகிற்கு நிகராக உணரச்செய்கிறார்கள். குறைபாடுடையவர்கள் என அவர்களை உலகம் கணிக்கின்ற போதும் சாதாரணர்களை விட ஆச்சரியப்படத்தக்க வகையிலான திறன்கள் தம்மிடம் நிறைந்திருப்பதை ஒவ்வோர் நிமிடமும் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் எப்போதும் இருகின்ற அந்த கபடமில்லாத சிரிப்பு அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணச்செய்கின்றது.

உலககாவிய ரீதியிலே மார்ச் மாதம் 21 ஆம் திகதி உலக டவுன் சின்ரோம் தினமாகவும், ஏப்ரல் 2 ஆம் திகதி ஒட்டிசம் விழிப்புணர்வு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவையிரண்டும் ஒரு மனிதனின் பிறப்பின் போதே ஏற்படத்தக்க குறைபாடுகளாக இனங்காணப்பட்டுள்ளது. 

இக்குறைபாடுகள் தொடர்பில் மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற போதும், விசேட தேவையுடையோர் தொடர்பிலான புரிதல் சாதாரண மக்களை எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பது கேள்விக்குறியான விடயமே! மேற்குலக நாடுகள் இப்புரிதல் நிலையிலே பல படிகள் முன்னேறியுள்ள போதும், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் விசேட தேவையுடையோர் பற்றிய போதியளவிலான தெளிவும், புரிதலும் இல்லை என்பதே நிதர்சனம்.

ஒட்டிசம், டவுன் சின்ரோம் போன்ற பிறப்பியல் குறைபாடுகள் வெறும் குறைபாடுகளே அன்றி, அவை நோய்கள் அல்ல என்கிற தெளிவு பெரும்பாலானோரிடம் இல்லை. சாதாரண மனிதர்களிடமுள்ள கோபம், பொறாமை, சந்தேகம், சுயநலம் போன்ற குறைகளை போல ஒட்டிசம், டவுன் சின்ரோம் போன்றவையும் இயல்பில் ஏற்படுகின்ற குறைபாடுகளேயாகும். எம்மிடமுள்ள கோபம், பொறாமை போன்ற குறைபாடுகளை முறையான பயிற்சி, கட்டுப்பாடு என்பவற்றின் மூலம் நிவர்த்திக்க முடியும் என நம்புகின்றோம்.

அவ்வாறே ஒட்டிசம் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்பதோடு, அவர்களுக்கான முறையான வழிகாட்டல்கள், பயிற்சிகளின் மூலம் அவர்களின் குறைபாட்டின் வீரியத்தை குறைக்க முடியும் என்கிறது மருத்துவம். முறையாக நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களை சுயமாக இயங்கச்செய்ய முடியும் என்கிறார் மென்ஹன்டி ஸ்கூலின் முகாமைத்துவ பொறுப்பாளர் கிறிஸ்டின். சக மனிதரின் அன்பும், உதவியும் அவசியம் என்கிற நிலையிலுள்ள ஒட்டிசம், டவுன் சின்ரோம் குறைபாட்டாளர்களை சமூகத்திலிருந்து ஒதுக்காது அரவணைப்பது ஒவ்வொருவரினதும் சமூகப்பொறுப்பாகும்.

உலக டவுன் சின்ரோம் தினம், உலக ஒட்டிசம் விழிப்புணர்வு தினம் போன்றவற்றை வெறும் தினங்களாக மட்டும் நோக்கும் பழக்கத்திலிருந்து மீள்வோம். அவற்றின் நோக்கமும், தாற்பரியமும் அறிய முற்படுவோம். பிறப்பியல் குறைபாடுடையோரும் உடலும், உணர்வுகளும் நிறைந்த மனிதர்கள் என்பதை மனதிலிருத்தி செயற்படுவோம். அவர்களுக்காய் அன்பின் விதையை உலகெங்கும் விதைப்போம்!

(நா. தனுஜா)