Hutch Sri Lanka மற்றும் முன்னர் Hutchison Global Communications என்ற பெயரில் அழைக்கப்பட்ட மொத்த காவிச்சேவை உள்ளிட்ட 3 மொபைல் தொழிற்பாட்டாளர்கள் குழுமத்தின் ஸ்தாபகரும் அதனை உருவாக்கியவருமான லீ கா-ஷிங் தனது 89 ஆவது வயதில் இளைப்பாறியுள்ளார்.

“எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள பங்குதாரர்களுடனான கூட்டத்தில் CK Hutchison மற்றும் CK Asset ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலகிக்கொள்ளும் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.” என்று 320,000 இற்கும் மேற்பட்ட Hutch பணியாளர்களுக்கு முகவரியிடப்பட்டு 2018 மார்ச் 16 வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் லீ கா-ஷி குறிப்பிட்டுள்ளார். 

எனினும் அவரால் உருவாக்கப்பட்ட இக்குழுமத்தின் ஆலோசகராக அவர் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதுடன் அதற்காக 5,000 ஹொங்கொங் டொலர் (637 அமெரிக்க டொலர்) வருடாந்த கட்டணத்தை அதாவது 12.25 அமெரிக்க டொலர் வாராந்தக் கொடுப்பனவை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

2018 ஜுன் 28 அன்று தனது 90 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள லீ ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் பிரகாரம் 37.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்து மதிப்பீட்டுடன் உலகில் 23 ஆவது செல்வந்தராகத் திகழ்ந்து வருகின்றார்.

தனக்குப் பதிலாக தனது புதல்வனான விக்டர் லீ ச்சார் குயோய் பணிப்பாளர் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விக்டர் லீ  33 ஆண்டுகளாக CK குழுமத்தில் பணியாற்றியுள்ளதுடன் குழும இணை முகாமைத்துவப் பணிப்பாளர் என்ற தனது தற்போதைய பதவியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளார்.

குழுமத்திற்கு லீ ஆற்றியுள்ள விலைமதிப்பற்ற பங்களிப்புக்களுக்காக அவருக்கு தங்களது உண்மையான நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 46 ஆண்டுகளாக,  CK குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவராக அதனை வழிநடாத்தியுள்ள லீ பங்குதாரர்களுக்கு அதிகபட்ச பெறுமானம் மற்றும் வருமானத்தை வழங்கும் முகமாக இயல்பான வளர்ச்சி, கூட்டிணைவுகள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள், மற்றும் சரியான நேரத்தில் மூலோபாய மீளாய்வுகள், பொருத்தமான தருணங்களில் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக பன்முகப்படுத்தல் மற்றும் உலகமயமாக்கலுடன் சீரான வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றுள்ளார்.

“எனக்கு 12 வயதாக இருக்கும் போது போர் ஒன்றிலிருந்து தப்பி, எனது குடும்பத்திற்கு உழைப்பதற்காக வேலை தேடி ஹொங்கொங்கிற்கு வந்து கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் கடந்துள்ளன. அதன் பின்னர் சிறிது காலத்திலேயே Ck Hutchison மற்றும் CK Asset ஆகியவற்றின் முன்னோடி நிறுவனமான Cheung Kong இனை நான் ஸ்தாபித்திருந்தேன். அது 1950 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு 001 HK என்ற பங்குக் குறியீட்டுடன் எனது நிறுவனத்தை பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்ட நிறுவனமாக வளர்ச்சி காணச் செய்ய என்னால் முடிந்தது” என்று லீ கா-ஷிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அதன் பின்னர், மிகுதி வரலாறு உலகறிந்த ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் Hutchison Global Communications நிறுவனத்தில் CK Hutchison குழுமம் கொண்டிருந்த பங்குகளை 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தனியார் பங்கு நிறுவனமான I Squared Capital இற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு அது விற்பனை செய்திருந்தது. குழுமம் தற்போதும் உலகெங்கிலும் Hutchison தொலைதொடர்பாடல் சேவை நிறுவனங்கள் மற்றும் Three தொழிற்பாடுகளை தன் கீழ் கொண்டுள்ளது. Hutchison Global Communications நிறுவனம் தற்போது HGC Global Communications என மறுபெயரிடப்பட்டுள்ளது. 

பாரிய CK குழுமத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் துறைமுகங்கள் மற்றும் அது தொடர்புபட்ட சேவைகள் சில்லறை வர்த்தகம், உட்கட்டமைப்பு, எரிசக்தி, தொலைதொடர்பாடல்கள், ஆதன அபிவிருத்தி மற்றும் முதலீடு, ஹோட்டல் மற்றும் அடுக்கு அறைச் சேவைத் தொழிற்பாடு  ஆதன மற்றும் செயற்திட்ட முகாமைத்துவம் ஆகாய விமான குத்தகை மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற துறைகள் அடங்கியுள்ளன.

CK Hutchison Holdings இன் கீழான Hutch நிறுவனமானது இலங்கையில் தொழிற்பட்டு வருகின்ற 5 பிரதான மொபைல் தொலைதொடர்பாடல்கள் வலையமைப்புக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன் நாடெங்கிலும் பல்வேறு வகைப்பட்ட GSM மற்றும் HSPA சேவைகளை வழங்கி வருகின்றது. ஆரம்பத்தில் “CallLink” என்ற பெயரில் அழைக்கப்பட்டதுடன் இலங்கையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்ட மொபைல் சேவை வழங்கல் நிறுவனமாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.