இலங்கையில் காதலர் தினத்தை ஒட்டிய காலத்தில் இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் உடற்கல்வி பயிற்சியாளரான டாக்டர் அசங்க விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்துக்கு பின்னரான காலப் பகுதியில் பதிவாகும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக டாக்டர் மேலும் கூறுகிறார்.

இலங்கையில் வழமையில், நாளொன்றுக்கு 4 அல்லது 5 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகின்ற நிலையில், காதலர் தினத்தின் பின்னர் வரும் நாட்களில் தற்கொலை எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

இந்த தற்கொலைகளுக்கான சரியான காரணங்கள் விசாரணைகளிலிருந்து வெளிப்படாத நிலையில், காதலர் தினம் மற்றும் அதனை ஒட்டிய நாட்களில் நடக்கும் தற்கொலைகளுக்கு மனத் துயரங்கள் முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

காதலர் தினத்தில் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத காரணத்தினால் சிலர் தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் மருத்துவர் அசங்க விஜேரத்ன தெரிவித்தார்.