கேள்வி:- யுத்தத்தினை நிறைவுசெய்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு பெருமளவில் இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ள நிலையில் விடுதலை போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கு உதவிய இந்திய அரசாங்கம் அதனை நிறைவுசெய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தமைக்கு காரணம் என்ன?
பதில்:- ஈழத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரிவினைப் போராட்டத்தினை இந்தியா எப்போதுமே விடுதலைக்கான போராட்டமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஈழத்தமிழர்கள் இத்தகைய கண்ணோட்டத்தில் இந்த விடயங்களை அணுகுவது மிகப்பெரும் குறைபாடாகும்.
1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது விடயமே இலங்கை ஒருமித்த நாடாக இருக்க வேண்டும் என்பது தான். அதனடிப்படையில் தனி ஈழ எண்ணத்தினை இந்தியா எப்போதுமே ஆதரிக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்னரான காலத்தில் மலையக தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருந்தது. வடக்கு தமிழர்களுக்கும் நெருக்கடிகள் இருந்தன. இந்த தருணத்தில் தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதே இந் தியாவின் நிலைப்பாடாகும்.
அதுவொருபுறமிருக்கையில் இலங்கை விடயத்தில் இந்தியா முழுமையாக தலையிட்டது. 1985 இல் இலங்கை அரசாங்கத்தினையும், போராட்ட தரப்பினரையும் அழைத்து இந்தியா வின் தலைமையில் திம்புவில் பேச்சு நடத்தப்பட்டது. அதன் பின்னர் பெங்களூருவில் பேச்சு நடத்தப்பட்டது. இவ்வாறான பேச்சுவார்த்தைகளை சரித்திர ரீதியாக பார்த்தோமானால் பிரபாகரன் ஆரம்பத்திலிருந்து எதற்கும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கவில்லை.
பெங்களூரு பேச்சுவார்த்தையின் போது பிரபாகரன் தனது சார்பில் பிரதிநிதியொருவரை அமர்த்திவிட்டு அவர் எழுந்து சென்றுவிட்டார். பிரபாகரனுக்கு என்றுமே தனது தலைமையிலேயே தனி ஈழம் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். இதனால் தான் ஏனைய போராட்ட இயக்கங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வந்தார்.
இதனால் தான் இந்தியா இலங்கை விடயத்தில் தலையீடு செய்தவுடன் விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு நல்கியிருந்தன. மேலும் தமிழக அரசியல் கட்சிகளுடன் போராட்ட அமைப்புக்களுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன.
அக்கட்சிகள் தம்முடன் நெருங்கிய தரப்பினருக்கு உதவிகளைச் செய்தார்கள். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், தி.மு.க.வுடனும் காங்கிரஸுடனும் ரெலோவும், நெருக்கமாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர்.தலைமையிலான அ.தி.மு.க. விடுதலைப்புலிகளை ஆதரித்தது.
இதனைவிடவும் இலங்கையிலிருந்து நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு வருகைதந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் இந்த நாட்டு மக்கள் பெருமளவில் உதவினார்கள். இவ்வாறான நிலைமை இருந்தபோதும் விடுதலைப்புலிகள் ஏனைய அமைப்புக்களுடன் கொண்டிருந்த முரண்பாட்டினை கைவிடவில்லை.
உதாரணமாக கூறுவதாயின் ரெலோ தலை வர் சிறி சபாரட்ணத்தை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதை தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி முன்னதாகவே அறிந்திருந்தார். அத்துடன் கருணாநிதி மதுரையில் உரையாற்றும்போது 24 மணிநேரம் அவகாசம் கொடுக்குமாறு பகிரங்கமாகவே கோரியபோதும் அதற்கான மரியாதை வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்துடன் அரசியல் ரீதியாக தொடர்பாடக்கூடிய தகைமை கொண்டிருந்த அமிர்தலிங்கம் போன்றவர்களை கொலை செய்தமை பிரபாகரன் செய்த மிகப்பெரும் தவறாகும்.
இவ்வாறு முக்கிய தலைவர்கள் மரணத்தின் பின்னர் தனி ஈழம் என்பது எவ்வாறு முன்னேற்றம் அடையும். நோர்வே தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டபோது அரசியல் தலைவர்களின் தேவை உணரப்பட்டது. இருப்பினும் விடுதலைப்புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றபோது பங்காளாதேஷ் உருவானதுபோன்று தனி ஈழமும் உருவாகி விடும் என பெரும்பாலான ஈழமக்கள் கருதினார்கள். இது ஈழத்தமிழர்களின் பெரும்குறைபாடாகும். பங்களாதேஷ் போரின்போது நான் அதில் நேரடியாகவே பங்குபற்றியிருந்தேன். அந்தப்போரில் மக்கள் போராடினார்கள். இந்தியா அனைத்து வகையிலும் அவர்களுக்கு உதவியது. ஏனெனில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) வேறு தமிழீழம் வேறு. அதனால் இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை.
தற்போதும் கூட தமக்கான விடயங்களை இன்னொருவர் செய்வார் என்று எதிர்பார்ப்பது அந்த மக்களிடத்தில் காணப்படுகின்ற பெருங்குறைபாடாகும். ஆக இந்தியா ஆரம்பத்திலிருந்த அதேநிலைப்பாட்டில் தான் இறுதி வரையில் இருந்தது.
கேள்வி:- இந்திய அமைதிப்படையில் புலனாய்வு தலைமையை வகித்திருந்தவர் என்ற வகையில் இலங்கை யில் பணியாற்றிய அனுபவத்தினை பகிர்ந்து கொள்ளு ங்கள்?
பதில்:- இலங்கைக்கு எதற்காக போகின்றோம் என்று தெரியாத நிலையில் தான் இந்திய இராணுவம் அங்கு சென்றது. அவர்கள் சென்று
மூன்று நாட்களின் பின்னர் புனேயில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனக்கு இலங்கை செல்லுமாறு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அச்சமயத்தில் ஜெனரல் தீப்பேந்தர் சிங்கை சந்தித்தேன். அதன்போது எத்தனை நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று கேட்டேன், ஏனெனில் என்னிடத்தில் மூன்று சீருடைகளே இருந்தன.
ஆகக்குறைந்தது ஒருவாரம் தங்கியிருந் தால் போதும் என்று தான் தீப்பேந்தர் சிங் என்னிடத்தில் கூறினார். இருநாடுகளுக்குமிடை யில் ஒப்பந்தம் கைச்சாத்தாகப்போகின்றது. இலங்கை இராணுவத்தினை முகாம்களிலேயே தங்குமாறு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அங்கு பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. ஆயுதக் குழுக்கள் அனைத்து ஆயுதங்களையும் வழங்கிவிடுவார்கள் அவ்வளவுதான் என்று கூறினார்.
உண்மையிலேயே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது பாதுகாப்புக்காகவே இந்திய இராணுவத்தினை இலங்கைக்கு அழைத்தார் என்று நினைக்கிறேன். அச்சமயத்தில் இரண்டு இந்திய கடற்படை கப்பல்களும் அதற்காக கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
ஜே.ஆருக்கு பாதுகாப்பு சம்பந்தமான பயம் ஏற்படுவதற்கு காரணம் இருந்தது. பிரபாகரனை தாக்குதல் நடத்துவதன் மூலம் பிடிக்க முடியும் என்று இலங்கை இராணுவம் தயார் நிலையில் இருந்தபோது தான் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனால் தான் ஜே.ஆர். இலங்கை இராணுவத்தினால் ஆபத்துக்கள் ஏதும் எழுந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய படையினரை வரவழைத்தார்.
அதேநேரம் இலங்கை–இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு பிரபாகரன் ஒப்புதல் அளித்தார். ஆனால் அவர் அதனை கடைப்பிடிக்கவில்லை. இடைக்கால நிருவாக சபை உருவாக்கப்பட்டபோது தானேதான் செயலாளர் பெயரை முன்மொழிவேன் என்றும் பிரபாகரன் உறுதியாகச் சொன்னார். ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மூவரின் பெயர்களில் அவர் முன்னிலைப்படுத்தியவரின் பெயர் இருந்தும் அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.பிரபாகரனைப் பொறுத்தவரையில் அவர் முற்றிலும் வேறுபட்ட மனநிலையிலேயே இருந்தார். புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ போன்ற அமைப்புக்கள் தம்மை விஞ்சிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனைவிட கிட்டிய வாய்ப்புக்களை உபயோகிக்கும் முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.
இதற்கு அடுத்து மிக முக்கியமான சம்பவம், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்தினால் பிடிக்கப்பட்டனர். பலாலிக்கு கொண்டுவரப்பட்டனர். அந்த சம்பவத்தினை நேரில் பார்த்தவராக நான் இருக்கின்றேன்.
அப்போதைய யாழ்.மாவட்ட தளபதியாகவிருந்த ஜெனரல் ஜெயரட்ன ஜே.ஆரை தொடர்பு கொள்ள முயன்றபோது சமிக்ஞை கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்த தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி ஜே.ஆர். உடன் உரையாடினார். பின்னர் என் அருகில் வந்தவர், ஹரி, ஜே.ஆர்.விரும்பவில்லை இவர்களை முடிக்க வேண்டியது தான் என்றார்.
புலேந்திரன் போன்றவர்களின் செயற்பாடுகளை ஜே.ஆர்.நன்கு அறிந்திருந்ததால் அவர்களை விடுவிக்கும் மனநிலைக்கு அவர் வந்திருக்கமாட்டார் என்பது எனது கணிப்பாகவுள்ளது. அதேநேரம் பிரதமராகவிருந்த ரணசிங்க பிரேமதாஸ ஆரம்பத்திலிருந்து இந்தியப் படையினர் இலங்கை வருவதை எதிர்த்து வந்தார். தேசியம் சார்ந்த மனநிலையில் அது சரியான விடயம். அதற்காக பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கியமை முட்டாள்தனமான விடயம். அந்த விடயத்தில் அவரும் ஏறக்குறைய பிரபாகரன் போன்று தான் செயற்பட்டு இருக்கின்றார்.
கேள்வி:- இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் திடீரென ஏன் முரண்பாடான நிலைமைகள் எழுந்து மோதல்கள் உருவாகின?
பதில்:- என்னுடைய அனுபவத்தில் விடுதலைப்புலிகள் போன்று 24 ஆயுத இயக்கங்களை கண்டிருக்கின்றேன். பிரபாகரன் போன்று பல்வேறு தலைவர்களை பார்த்துள்ளேன். விடுதலை என்ற தோரணையில் உள்ள அந்த தலைவர்களின் மனநிலையானது ஒரு கட்டத்தில் தன்னால் எதனையும் செய்ய முடியும் என்று நம்புகின்றார்கள்.ஆலோசனை சொல்பவர்களைக் கூட வெறுக்கின்றார்கள்.
குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தீர்மானங்களை ஆரம்பக்கட்டத்தில் குமரப்பா, பிரபாகரன், கிட்டு, யோகி, மாத்தையா போன்றவர்கள் ஒன்றிணைந்தே எடுப்பார்கள். தொட ரும் காலத்தில் பிரபாகரன் மட்டுமே தீர்மானங்களை எடுத்தார். ஆலோசனை கூறியவர்களை வெறுத்தார். போரில் வீரம் மட்டுமே போதாது. விவேகமும் தேவை என்பதை உணர வேண்டும்.
இவ்வாறிருக்கையில் இந்திய– இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானபோது அனுபவம் வாய்ந்த அமைச்சராகவிருந்த நரசிம்மராவ், அதனை எதிர்த்தார். அவர்,வெளிநாட்டில் நடக்கும் ஒரு உள்நாட்டு பிரச்சினையில் அங்குள்ள போராட்ட அமைப்புக்கள் சார்ந்த செயல்பாட்டுக்கு எவ்வாறு இந்தியா உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆனால் இந்தியா அந்த உத்தரவாதத்தினை இலங்கைக்கு வழங்கியது. இறுதியில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர். போராட்ட அமைப்புக்களிடத்தில் இருந்து ஆயுதங்களை களைந்து தாருங்கள் என்று கோரினார். ஆயுதங்களை வைக்காத அமைப்புக்களுடன் இந்திய அமைதிப்படையினர் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கேள்வி:- இந்திய அமைதிப்படைக்கு விடுதலைப்புலிகளுடனான மோதலில் பின்னடைவைச் சந்திப்பதற்கு பிரதானமான காரணம் என்ன?
பதில்:- இந்திய அமைதிப்படையானது இலக்குகள் இன்றியே இலங்கைக்கு சென்றிருந்தது. திலீபனும் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்தார். அதுபெரும் தாக்கத்தினை கொடுத்தது. குமரப்பா,புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் மரணம் நடைபெற்றது. இந்த நிலையில் பிரபாகரன் பழிவாங்கும் மனப்பாண்மையில் இருந்தார்.அதனையடுத்து விடுதலைப் புலிகளால் போர் அறிவிப்பு விடுக்கப்பட்டது.
முக்கியமாக 12 பேரின் மரணம் ஒரு கரும்புள்ளியான விடயம். இந்தியா நினைத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை என்பதற்கு என்னுடைய மட்டத்தில் பதில் இல்லை. இருந்தாலும் அந்த 12 பேரின் உடல்களை கையளிக்கும்போது மாத்தையாவிடமும் அவருடன் வந்திருந்த வழக்கறிஞரிடத்திலும் இந்திய இராணுவத்துடன் போரிடும் முடிவை எடுக்காதீர்கள். அது பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை பிரபாகரனிடம் கூறுங்கள் என்று தெரிவித்திருந்தேன்.
இருப்பினும் போர் இடம்பெற்றது. முதற்கட்டத்தில் இந்தியப் படையினருக்கு பெரும் இழப்புக்கள். சரியான திட்டமிடல்கள் இருக்கவில்லை. இருப்பினும் பின்னையை நாட்களில் இந்திய இராணுவம் சாதாரண நிலைமையை உருவாக்கியது. வடக்கில் இந்தியாவின் நேரடிப்பிரதிநிதிகளாக இந்திய இராணுவம் இருந்தமையால் ரயில்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கிகள் உள்ளிட்டவற்றை மீளமைத்தது.
தொடர்ந்து படைநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் வவுனியாவை அண்மித்து ஏ9 வீதிக்கு வலதுபக்கமாகவுள்ள அலம்பில் காட்டுப்பகுதிக்குள் விடுதலைப்புலிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தோம். அச்சமயத்தில் கூட அவர்களை கொலை செய்யக்கூடாது என்று டெல்லி எம க்கு அறிவுறுத்தியிருக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் தான் மீளவும் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டோம்.
கேள்வி:- விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான மாத் தையாவுக்கும் இந்தியப் புலனாய்வு அமைப்பான ரோ வுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டனவா?
பதில்:- அது தொடர்பாக நான் எந்த விடயங்களையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் அனைத்து மட்டத்தினருடனும் ரோ வுக்கு தொடர்புகள் காணப்பட்டன என்பது எனக்கு தெரியும். பிரபாகரன் கூடவும் ரோ வுக்கு தொடர்புகள் இருந்தன. ஆனால் மாத்தையாவுடன் எத்தகைய உறவுகள் இருந்தன என்பது எனக்குத் தெரியாது.
கேள்வி:- இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைவிடயத்தினை நீங்கள் முன்னதாக அறிந்ததாக கூறியிருக்கின்றீர்களே?
பதில்:- ஆம், இலங்கையிலிருந்து திரும்பியதும் எமது தலைமை அலுவலகத்தினை ஸ்ரீநகருக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அனைத்து கட்டமைப்புக்களையும் சென்னையிலிருந்து அனுப்பிய நிலையில் இறுதியாக ரேடியோ இன்டர் செப்ட் கட்டமைப்பு மாத்திரம் மாற்றுவதற்கு தயாராக இருந்தபோது நீலகிரி அருகாமையில் இருந்து விடுதலைப் புலிகளின் ஒலிப்பதிவு கிடைக்கப்பெற்றதாக கூறினர். அதில் அவர்கள் ராஜீவ் காந்தியை மண்டையில் போடுங்கள் என்று அறிவித்திருக்கின்றார்கள் என்றனர்.
பொதுவாக இந்த கட்டமைப்பில் இலங்கைத் தமிழ், சிங்களம் தெரிந்த உத்தியோகத்தர்கள் பணியாற்றுவார்கள். இதனால் என்னிடத்தில் அவர்கள் அதனை குறிப்பிட்டிருந்தனர். அச்சமயத்தில் நான் விடுதலைப்புலிகள் மரண
தண்டனை அறிவிப்பினைத் தான் இலங்கை தமிழ் வழக்கில் கூறியிருக்கின்றார்கள் என்பதை எனது மூத்த அதிகாரியாக இருந்த ஜெனரலிடத்தில் குறிப்பிட்டேன்.
அச்சமயத்தில் அவர் எமது கட்டமைப்புக் கள் மாற்றப்பட்டுள்ளமையால் எமக்கு அதில் அதிகாரம் கிடையாது. அந்த தகவலை இந்திய உளவுத்துறை பணியகத்திற்கு அனுப்புமாறு கோரினார். நான் அப்பிரிவில் சென்னையில் தலைவராகயிருந்த தமிழர் ஒருவரிடம் தகவலை வழங்கினேன். அதன்போதும் மண்டையில்போடுங்கள் என்ற வார்த்தையை அவர் பெரிதாக கருதவில்லை. இருந்தபோதும் நான் நூற்றுக்கும் அதிகமான கொலைச் சம்பவங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினேன்.
அதன் பின்னர் அந்த தகவல் எவ்வாறு பரிமாறப்பட்டது என்பதை நான் அறியவில்லை. இதே ஒலிபரிமாற்ற பதிவு இந்திய கடற்படையினரிடத்திலிருந்தும் கிடைக்கப்பெற்றதாக ராஜீவ் கொலை புலனாய்வுக் குழுவின் இயக்குநராகவிருந்த டி.ஆர்.கார்த்திகேயனும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் ராஜீவ் காந்தியின் படுகொலை இடம்பெறுவதற்கு சுமார் ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
கேள்வி:- இந்திய அமைதிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் யுத்தகாலத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- மனிதனுக்கு காணப்படும் அடிப்படை உரிமையே உயிர்வாழும் உரிமையாகும். போர் என்பதே மனிதனுக்குள்ள அடிப்படை உரிமையை எடுப்பதாகும். இவ்வாறான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இந்தியா கற்றுக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் ஊடாக முறைப்பாட்டினை செய்தார்களாயின் அதனை விசாரித்து இராணுவத்திடம் கையளித்து பின்னர் நடவடிக்கை எடுக்க முடியும்.
உதாரணமாக காஷ்மீரில் 2375 முறைப்பாடுகள் இராணுவத்துக்கு எதிராக பதிவாகியுள்ளன. அவற்றை விசாரணை செய்து 135 இராணுவத்தினர் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். குறிப்பாக இந்த விடயத்தில் இராணுவ நீதிமன்றத்தினை பகிரங்க அமர்வு செய்து தீர்ப்புக்கள் வழங்கப்பட்டமை முக்கிய விடயமாகும். இந்த விடயத்தில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
இந்திய அமைதிப்படையினர் அங்கு இருந்தபோது சில தவறுகள் நிகழ்ந்தன. அக்காலகட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பில் உயர்ந்த சிந்தனை இருக்கவில்லை. மேலும் அக்காலத்தில் சட்டம் ஒழுங்கு இலங்கை பொலிஸ் தரப்பிடம் இருந்தது. கிராமங்களில் கிராம சேவகர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்த விடயத்தினை கையாண்டிருக்க வேண்டும். சாட்சியங்களை திரட்டி முறைப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதிகாரம் இருந்தும் அவர்கள் அவற்றை வேடிக்கை பார்த்தவர்களாக இருந்தனர். அதுகுறித்து விசாரணை குழு தேவை என்று இலங்கை அரசு நிச்சயித்தால் நியமிக்கலாம் என நானும் பலதடவைகள் பரிந்துரைத்துள்ளேன்.
அதேநேரம் இலங்கை இராணுவம் ஈழப்போரை மனிதாபிமான போராக நடத்தியதாக கூறுகின்றது. அவ்வாறான நிலையில் இந்த விடயங்களை ஆராய்ந்து விசாரணைக் குழுவை நியமித்து நடவடிக்கைகள் போர் முடிந்தவுடன் எடுக்கப்பட்டிருந்தால் நிலைமைகள் மோசமடைந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. அதனை அவர்கள் செய்யவில்லை. இந்த விடயத்தினை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடத்தில் நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தபோது அவர் கோபமடைந்தார்.
இது இலங்கையில் எப்போதுமே நிகழும் குறைபாடு. குறிப்பாக மனித உரிமைகள் மீறல் ஆய்வு நடத்த இந்தியாவிலிருந்து நீதியரசர் பகவதி இலங்கை அரசின் அழைப்பில் வந்த போது அவருக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே மனித உரிமை கள் விடயத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் மனித உரிமைகள் விடயத்தில் தெற்காசிய நாடுகளில் பாரிய குறைபாடு உள்ளது. மக்கள் மட்டத்திலிருந்து அதனை கட்டியெழுப்ப வேண்டியது அரசியல் தலைவர்களின் பணியாகின்றது. அவ்வாறு செயற் படாது விட்டுவிட்டு இங்கு பின்லாந்து, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள மனித உரிமை சூழலை எதிர்பார்க்க முடியாது.
தற்போது கூட இலங்கையில் இடம்பெற்ற தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுகின்றார்கள். இந்த விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நாடுவதென்றால் முதலில் அடிப்படை ஆதாரங்களை சேகரித்து அதனை முறையாக சமர்ப்பிக்கவேண்டும். எடுத்த எடுப்பில் சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட முடியாது. பிரசாரம் செய்வதனை விடுத்து சாட்சியங்களை சேகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாது விவேகமாக செயற்பட வேண்டும்.
கேள்வி:- சமகால இலங்கை அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு அந்நாட்டு தேசிய பிரச்சினைக்கு எவ்வாறாக தீர்வு காணமுடியும்?
பதில்:- தமிழகத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பில் பல கட்சிகளும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அந்த மக்களுக்காக இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து உதவிகளை வழங்கியிருக்க முடி யும். அதனை செய்யவில்லை. ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறு இருக்கின்றார்கள்.
தமிழ் நாட்டில் மாத்திரம் 12 சதவீத தொழில் வளர்ச்சி காணப்படுகின்றது. தேசிய உற்பத்தி யும் அதிகரித்துள்ளது. ஆகவே இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தொழிலதிபர்களை ஒன்றிணைத்து இலங்கை தமிழர் கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்தினை மீள கட்டியெழுப்ப எவ்வாறு உதவ முடியும் என்று திட்டமிட்டிருக்க முடியும். அதனை செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் 12 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக் கமாட்டார்கள்.
கல்வி விடயத்தில் தமிழகத்தில் தலை சிறந்த கல்லூரிகள் உள்ளன. வடக்கில் உயர்கல்வியை தொடரமுடியாதிருப்பவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் கல்வி கற்பதற்குரிய வாய்ப்புக் களை உருவாக்கியிருக்கலாம். பொறியியல் துறையில் இங்குள்ள கல்லூரிகளில் கற்பதற்கான வெற்றிடங்கள் உள்ளன. ஆகவே இவற் றை கவனமெடுத்து செய்திருக்கமுடியும். இந்த மனநிலை மாறவேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து தமது மக்களுக்காக ஒரு அரசியல் திட்டவரைபொன்றை ஏன் மேற் கொள்ளக்கூடாது? இது தமிழர்களிடத்தில் காணப்படும் பெருங்குறைபாடாகும். தமது முகத்தினை கண்ணாடியில் பார்ப்பதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, தேசியப் பிரச்சினை தீர அரசியல் சாசன திடட்மொன்றை வரைவு செய்திருந்தார். அதுமிகவும் அருமையான தீர்வுத்திட்டமாகும். அது நடைமுறைப்படுத்தப் படாது போனமை துரதிர்ஷ்டவசமான விடயமாகும். ஆட்சிமாற்றம் இடம்பெற்ற பின்னர் கூட தயாராகவுள்ள அந்த வரைபை முழுமையாக அமுலாக்கம் செய்வதற்கு குரல் கொடுக்குமாறு தமிழ்த் தலைவர்களிடத்தில் கோருகின்றேன்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை விடவும், இடைக்கால அறிக்கை வெளியிட்டு குழப்பங்கள் நிகழ்வதைவிடவும் தயார் நிலையில் உள்ள அந்த வரைபில் சிறுமாற்றங்களை செய்து நடைமுறைப்படுத்தலாம் அவ்வாறில் லையேல் இந்த விடயம் இழுபறியானதாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM