டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்த பின்னரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் நுளம்புகள் பொதுவாக மூன்று வழிகளில் பரவுகிறது. எம்முடைய வீட்டுப்பயன்பாட்டிற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை திறந்து வைத்தல், வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தேவையில்லாத பொருள்களை போட்டு வைப்பதால் அதில் தேங்கும் நீர், மரப்பொந்துகள், பாறைகளில் உள்ள குழிகள் அதில் தேங்கும் நீர் ஆகியவற்றின் வழியாக டெங்கு நுளம்புகள் பரவுகின்றன.

இந்த நுளம்புகள் முட்டையிட்டு புழுக்களாக மாறி, நுளம்புகள் உற்பத்தியாவதற்கு 8 முதல் 10 நாள் வரையாகும். எனவே வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை வாரத்துக்கு ஒரு முறை மாற்றிவிடுவது நல்லது.

டெங்குவை ஏற்படுத்துவது ஒரு வைரஸ், அதனை பரப்புவது தான் ஏடிஎஸ் நுளம்புகள். டெங்கு ஏற்படுத்தும் வைரஸை அழிப்பதற்கான தொழில்நுட்பங்களும், மருத்துவ நடைமுறைகளும் இது வரை கண்டறியப்படவில்லை அல்லது உருவாக்கப்படவில்லை. எனவே ஏடிஎஸ் நுளம்புகளின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

அதேபோல் டெங்கு காய்ச்சல் அல்லது வேறு எந்த காய்ச்சலுக்கும் தயவு செய்து சுயமாக மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள். ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் குணமான பிறகு தான் இரத்த கசிவு ஏற்படும். எனவே காய்ச்சல் குணமான பின்பும் கவனமாக இருக்கவேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடைந்த பின்னர் உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் உடனே மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது அவசியம். ஏனெனில் உங்களுடைய உடலில் இருந்து டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் செயல்படாமல் இருக்கலாம் அல்லது அழிக்கப்படாமல் இருக்கலாம். அதனால் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பின்னரும் ஆரோக்கிய விடயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

டொக்டர் ராஜமாணிக்கம்

தொகுப்பு அனுஷா