தாய்லாந்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டு 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று அந் நிறுவனத்தின் 50 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பஸ்ஸின் நடுப்பகுதியில்  தீ பிடிக்க தொடங்கியுள்ளது.

பஸ்ஸிலிருந்த  தொழிலாளர்கள் பலர் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். மீத முள்ளவர்கள் தப்பிக்க முயற்சித்த போது பஸ் முழுவதும் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர்  தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இருந்த போதிலும் இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர்.