ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை அரசியல் சாசன ரீதியாக பெறுவதற்கு அதிகாரப் போட்டி அரசியலை கைவிட்டு தமிழ் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும் நிதி அமைச்சு உட்பட 1977, 1980, 1982 மற்றும் 2001ஆகிய ஆண்டுகளில் அமைச்சுப்பதவிகளை வகித்தவரும் கழகத்தின் செய்தி தொடர்பாளராக பணியாற்றியவரும் தற்போதைய கழக அமைப்புச் செயலாளருமான சி.பொன்னையன் கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். அச் செவ்வியின் முழு வடிவம் வருமாறு;
கேள்வி:- அண்ணா திராவிட முன்னேற்றகழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு பின்னர் கழகத்தில் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை தோன்றியுள்ளதே?
பதில்:- அம்மாவுக்கு கழகம் தான் கோயில். நாங்கள் எல்லாம் அவர்களின் பிள்ளைகள். அம்மா தான் எங்களுக்கு எல்லாம் கடவுள். இப்படித்தான் நிலைமை இருந்தபோது தான் கழகத்தினுள் நடைபெறுகின்ற விடயங்கள் தொடர்பில் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே கவனம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.
இதன்போது போயஸ் தோட்டத்தில் அம்மாவுடன் இருந்துகொண்டே துரோகமிழைத்த, சதி செய்த பலரைக் கண்டறிந்தபோது அவர்களை அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றவும் செய்தார்.
ஆக மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னரே அம்மா இவற்றையெல்லாம் அறிந்து அவர்களை வெளியேற்றியிருந்த நிலையில் தற்போது தான் கழகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது போன்றதொரு பிம்பம் காண்பிக்கப்படுகின்றது.
கேள்வி:- கழகத்தின் ஸ்தாபக உறுப்பினராக வும் செய்தி தொடர்பாளராகவும் உள்ள நீங் கள் அவரின் மறைவு குறித்த சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- என்னைப் போன்றவர்கள் புரட்சித்தலைவர், அம்மா போன்றவர்கள் மீது அதிகபற்றுக் கொண்டவர்களாக இருந்தோம். அம்மாவுக்கு சிலகாலமாக உடல்நிலை சரியாக இல்லை என்பதை எம்மால் உணர முடிந்தது. இருந்தபோதும் அம்மாவின் உடல்நிலைக்கு என்ன ஆயிற்று? அவருக்கு எத்தகைய சிகிச்சைகள் நடைபெறுகின்றன போன்ற எதனையும் அறியமுடியாது போயஸ் தோட்டமே மர்ம மாளிகைபோன்று தான் செயற்பட்டு வந்தது.
புரட்சித்தலைவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அமெரிக்காவுக்கு அவரை அழைத்து சென்று உயர்தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அக்காலத்தில் அவர் அமெரிக்கா செல்வதற்கும் அங்கு சிகிச்சைகள் அளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான அனைத்து விடயங்களையும் நானும் டாக்டர் காண்டீபனுமே மேற்கொண்டிருந்தோம். அதன்மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவரை காப்பாற்றியிருந்தோம்.
அவ்வாறான நிலையில் அம்மாவினை அவதானித்த நான் உள்ளிட்ட பலரும் அவருடைய நிலைமையை புரிந்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தோம். அம்மா அதனை ஏற்றுக்கொண்டபோதும் ஒருகட்டத்தில் போயஸ் தோட்டத்தில் இருந்தவர்கள் அதனை நிராகரிக்கும் வகையில் செயற்பட்டார்கள். அதன் பின்னர் அம்மாவே தமிழகத்தில் உள்ள அப்பலோ வைத்தியசாலையிலேயே நவீன வசதிகள் அனைத்தும் இருப்பதால் அங்கேயே சிகிச்சை பெற்றுவிடமுடியும் என்று கூறிவிட்டார்.
இந்தியாவைப்பொறுத்தவரையில் உலகில் அதிகளவு நீரிழிவு நோயாளர்களை கொண்ட நாடாகவுள்ளது. இருப்பினும் உணவுப்பழக்கவழக்கங்கள் அல்லது சித்த, ஹோமியோபதி போன்ற சிகிச்சைகள் தமிழகத்தில் அதிகமாவுள்ளன. அப்படியிருக்கையில் நீரிழிவு நோய் காணப்பட்ட அம்மாவுக்கு அது அதிகரித்துச் செல்வதற்கு ஏன் இடமளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. அந்த வினாவுக்கு போயஸ் தோட்டத்தில் விடை கிடைக்கவே இல்லை.
அப்படியான நிலைமையில் தான் அம்மா திடீரென்று அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்பலோ வைத்தியசாலை அளித்த சிகிச்சையை நான் ஒருபோதும் குறைகூறமாட்டேன். காரணம், அந்த வைத்தியசாலைக்கும் கழகத்திற்கும் இடையில் நீண்ட தொடர்புகள் உள்ளன. புரட்சித்தலைவர் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நானும் டாக்டர் காண்டீபனும் அனைத்து விடயங்களையும் இணைந்து கையாண்டிருந்தோம்.
அவ்வாறான நிலையில், அப்பலோ வைத்தியசாலை நிருவாகத்தினர், லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சர்ட் மற்றும் டெல்லி ஏய்ம்ஸ் வைத்தியசாலையின் டாக்டர் ஹில்னானி தலைமையிலான குழுவினரையும் வரவழைத்து சிகிச்சைகள் அளித்தார்கள். உலகப்பிரசித்தி பெற்ற டாக்டர்களை அழைத்துவந்து சிறந்த சிகிச்சைகளை அளிப்பதற்காக பல முயற்சிகளை எடுத்திருந்தார்கள்.
இந்த வைத்தியர்கள் அம்மாவின் மறைவின் பின்னர் அளித்துள்ள அறிக்கையில், காலம் கடந்த நிலையில் தான் சிகிச்சைக்காக அம்மா தமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்டபோது 60சதவீதம் நிலைமை மோசமடைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் அரிப்பு இருக்கும். அதைப்போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் அம்மாவுக்கு தொடர்ச்சியாக ஸ்டீரொய்ட் ஊசிமருந்து வழங்கப்பட்டு வந்துள்ளது. அதியுச்சமாக அவசர நிலையில் உயிரைப்பாதுகாக்கும் மருந்தாகத்தான் அதனை பயன்படுத்த முடியும். அதனை தொடர்ச்சியாக ஒருவருக்கு வழங்க முடியாது.அவ்வாறு வழங்கினால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
இந்த மருந்தின் விளைவு சாதாரண செவிலியர்களுக்கே தெரிந்திருக்கின்ற நிலையில் போயஸ் தோட்டத்தில் மன்னார் குடியினரால் நியமிக்கப்பட்ட மருத்துவ குழு அதனை சிந்திக்காது தொடர்ச்சியாக அந்த மருந்தினை அம்மாவுக்கு ஏன் வழங்கியது என்ற கேள்வியும் உள்ளது. இது மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி:- ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் நீங்கள்தான் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்திருக்கின்ற நிலையில் உங்களுக்கு எவ்வாறு தகவல்கள் வழங்கப்பட்டன?
பதில்:- நான் அக்காலப்பகுதியில் செய்தி தொடர்பாளராக இருந்தது உண்மைதான். ஆனால் அப்பலோ மருத்துவமனையில் அம்மாவுக்கு என்ன நடக்கின்றது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அக்காலத்தில் பதில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஏனைய மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட எவருக்குமே அனுமதி அளிக்கப்படவில்லை.
மருத்துவமனை நிருவாகத்திடம் நாம் அந்தத்தருணத்தில் பேச்சுக்களை நடத்தியபோது, சசிகலா –அம்மாவின் பாதுகாவலர் என்று கையொப்பம் இட்டுள்ளதால் அவருடைய அனுமதியின்றி நாம் யாரையும் அனுமதிக்க முடியாது என்று பதிலளித்து விட்டார்கள். இதனால் எம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை.அவர்கள் சில சமயங்களில் சொல்கின்ற விடயங்களை மட்டுமே நான் ஊடகங்களுக்கு கூறுவேன். ஏனைய கட்சியினருக்கு கூறுவேன். அவ்வளவு தான்.
கேள்வி:- மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னரே சசிகலா உள்ளிட்டவர்கள் குறித்து ஜெயலலிதா அறிந்திருந்து அவர்களை வெளியேற்றியிருந்த நிலையில் அவரால் மீண்டும் போயஸ் தோட்டத்திற்கு திரும்பி அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தினை எவ்வாறு பெறமுடிந்தது?
பதில்:- மன்னார்குடி குடும்பம் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சசிகலா, அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக்கடிதத்தினை நான் உள்ளிட்ட மூத்த முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அம்மா படித்துக்காட்டினார். அதில், என்னுடைய குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் இவ்வாறு உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை.
அதனால் வருத்தமடைகின்றேன். நான் உங்களுக்காகவே இருப்பவள். உங்களுக்கு பணியாளராக இருக்க விரும்புகின்றேன். அரசியலில் ஈடுபடவிரும்பவில்லை. என்னை அனுமதியுங்கள் என்று கோரியிருந்தார். அதன் பின்னர் அம்மாவின் காலில் விழுந்து சசிகலா அழுதார். அதனை நம்பிய அம்மா அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார். ஆனால் கட்சி விடயங்களில் எந்த அதிகாரத்தினையும் வழங்கியிருக்கவில்லை. சசிகலாவின் நாடகத்தினை நாம் யாருமே உணர முடியாது போய்விட்டது.
கேள்வி:- அம்மாவின் மறைவின் பின்னர் கழகத்திற்குள் ஏற்பட்ட குழப்ப சூழலின்போது சசிகலாவின் ஆதரவாளராக செயற்பட்ட நீங்கள் மனம் மாறியது ஏன்?
பதில்:- சசிகலாவினைப் பொறுத்தவரையில் அவர் அறிவாளி. சிந்தித்து, நிதானமாக பேசுவார். அதில் அவரை குறைசொல்ல முடியாது. ஆனால் அவர் அனைத்தையும் தனது சொந்த நலத்துக்காக அதாவது, கட்சியை, சொத்துக்களை கையகப்படுத்துவதற்காக அம்மாவின் மீது அக்கறைப்படாது இருந்து வேறுவிதமாக அனைத்தையும் பயன்படுத்தியிருக்கின்றார் என்பதை நாம் எப்போது ஆதாரத்துடன் அறிந்தோமோ அந்த தருணத்தில் அவருக்கு எதிர்ப்பினை வெளியிட்டோம். அந்த உண்மைகளை கண்டறிந்த பின்னர் என்போன்றவர்கள் தற்போதைய முதலமைச்சர் தலைமையிலான கழகத்தில் மீண்டும் இணைந்து கொண்டோம்.
கேள்வி:- தற்போது வினைத்திறன் மிக்க ஒரு தலைமையை கழகம் கொண்டிருக்கவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?
பதில்:- அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் வினைத்திறன் மிக்க தலைவர்கள் இல்லை என்று கூறிவிடமுடியாது. காரணம், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகச்சிறந்த நிருவாகியாக செயற்பட்டு வருகின்றார்.
அதேபோன்று ஏற்கனவே மூன்று தடவைகள் முதலமைச்சர் பதவியை வகித்த துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் திறமைகள் காணப்படுகின்றன. ஜல்லிக்கட்டு, ஆந்திர நீர்வழங்கல் திட்டம், அனர்த்தம் ஏற்பட்டபோது நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு என பல்வேறு விடயங்களில் அவர் திறம்படச் செயற்பட்டிருக்கின்றார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட நல்ல சிந்தனையாளராக செயற்படுகின்றார். துணைமுதலமைச்சருடன் இணைந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகின்றார். இருப்பினும் ஊடகங்கள் அவை தொடர்பில் செய்கின்ற பிரசாரம் பின்னடைவுகளுக்கு காரணமாகின்றன.
எனினும் தற்போது ஊடகங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எழுந்துள்ள விமர்சனத்தால் அவை தம்மை சுயபரிசீலனைக்கு உட்படுத்தி செயற்பட ஆரம்பித்திருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. தற்போது அம்மாவின் மக்கள் நலத் திட்டங்களை நாம் இலத்திரனியல் புகையிரத வேகத்தில் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.
கேள்வி:- ஈழத்தமிழர்கள் விடயம் சம்பந்தமாக முதன்முதலாக எம்.ஜி.ஆரின் பணிப்பில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தவர் என்ற வகையில் அந்த அனுபவத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்?
பதில்:- ஆம், புரட்சித்தலைவரின் பணிப்பில் என்னுடைய தலைமையிலான குழுவினர் ஐந்து தடவைகள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்திருந்தோம். ஈழத்திலே நிலைமைகள் மோசமடைகின்றன என்ற விடயம் தொடர்ச்சியாக புரட்சித்தலைவருக்கு கிடைத்தது. குறிப்பாக ஈழத்தமிழ் பெண்கள் வன்புணர்வுகள், இனரீதியான அடக்குமுறைகள் நிகழ்கின்றன என்றெல்லாம் கூறப்பட்டது.
இதனையடுத்து புரட்சித்தலைவர் ஈழம் சம்பந்தமாக கொள்கைரீதியான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார். இதனால் ஈழத்திற்கு தனது புலனாய்வாளர்களை அனுப்பினார். களநிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதன் பிரகாரம், சிங்கள பேரினவாதத்தினர் கடும்போக்காக செயற்படுகின்றார்கள் என்பது புலப்பட்டது.
குறிப்பாக இந்துக்கள் வாழ்ந்த பாகிஸ்தானில் பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வாழ முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அதுபோன்று சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை அடக்கி ஒடுக்கி நாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை உறுதி செய்யவேண்டும்,அத்துடன் அரசாங்கத்திலும் பௌத்த தேரர்களின் ஆதிக்கம் இருந்தது போன்ற கொடுமையான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன என்பது தெளிவாக்கப்பட்டது.
மண்ணின் மைந்தர்களான தமிழர்களை விஜயனின் வருகையுடன் தோற்றம்பெற்ற ஒரு இனம் அந்த மண்ணை விட்டே அகற்ற முயல்வதை கண்டு புரட்சித்தலைவர் உணர்ச்சிவசப்பட்டார். அந்த மக்களுக்காக குரல்கொடுக்க தயாரானார். பிரதமர் இந்திரா காந்திக்கு நிலைமைகளை விளக்குவதற்காக எம்மை அனுப்பி வைத்தார். ஐந்து தடவைகள் நாங்கள் சந்திப்புக்களை நடத்தினோம். ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான சான்றுகள் பலவற்றை வழங்கினோம். அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவரின் கருத்துக்களை பிரதமர் இந்திரா காந்தியும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டார்.
அதன் பின்னர் அவரும் தனது புலனாய்வாளர்களை அங்கு அனுப்பி நிலைகளை தெரிந்துகொண்ட பின்னர்தான் தமிழகத்தின் காட்டுப்பகுதியில் 13இடங்களில் பயிற்சி முகாம்களை அமைத்து இரகசியமான ஆயுதப்பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு ஏ.கே.47.துப்பாக்கிகளும் வழங்கப்பட்டன. இந்திராகாந்தி அம்மையாரின் துணையுடன் புரட்சித்தலைவர் ஈழத்தமிழர்களுக்காக செய்த மாபெரும் புரட்சியே இதுவாகும்.
கேள்வி:- அக்காலத்தில் ஈழத்தில் உருவான ஆயுத ரீதியாக பல்வேறு போராட்ட அமைப்புக்கள் தொடர்பில் எம்.ஜி.ஆர். எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்?
பதில்:- அப்போதிருந்த விடுதலைப்புலிகள், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., அமிர்தலிங்கத்தின் புதல்வருடைய அமைப்பான டெலா உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களும் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளித்திருந்தார். அனைவருடனும் நல்லுறவைப் பேணினார்.
இச்சமயத்தில் தான் பாண்டி பஜாரில் ஒரு நாள் புளொட் அமைப்பின் தலைவர் முகுந்தனுக்கும்(உமா மகேஸ்வரன்) தம்பிக்கும்(பிரபாகரன்) இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதன்போது தம்பி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். உடனடியாக புரட்சித்தலைவர் என்னைத் தொடர்பு கொண்டார். நான் அப் போது சிறை உள்ளிட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தேன்.
உடனடியாக தம்பி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதற்கு அமைவாக தம்பி உள்ளிட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து சிறையிலிருந்து நேரடியாக புரட்சித்தலைவரிடத்தில் அழைத்துச் சென்றேன். அத்துடன் புரட்சித்தலைவர் அனைத்து அமைப்புக்களையும் அழைத்தார். அச்சமயத்தில் புரட்சித் தலைவர் கூறிய வசனம் கூட எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது.
விடுதலைக்காக கருத்துவேறுபாட்டுடன் ஐந்தாறு மாடுகளாக மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களை தாக்க வேண்டும் என்று வெறிபிடித்த சிங்களம் என்ற சிங்கம் பார்த்துக்கொண்டுள்ளது. நீங்கள் ஒன்றாக இணைந்து சிங்கம் வரும்போது பத்து கொம்பால் தாக்கினால் அதனை கொன்றுவிட முடியும். தனித்தனியாகச் சென்றால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். ஆகவே ஒற்றுமையாக இருங்கள். நான் உதவுகின்றேன் என்றார்.
அதன்பிரகாரம் பாரபட்சமின்றி ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கினார். தி.மு.க.வின் பின்னணியுடன் புரட்சித்தலைவரையே விமர்சித்த ரெலோவின் தலைவர் சிறிசபாரட்ணம் உள்ளிட்டவர்களுக்கு கூட உதவிகளை வழங்குவதில் புரட்சித்தலைவர் வேறுபாட்டினைக் காட்டியிருக்கவில்லை.
கேள்வி:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைமைகளிடத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டது ஏன்?
பதில்:- முழுமையாக அப்படிக்கூறிவிடமுடியாது. புரட்சித்தலைவர் இருந்தபோது அவருடைய பணிப்பில் விடுதலைப்புலிகளுக்கான நிதி அம்மாவின் கையால் தான் போயஸ் தோட்டத்தில் வைத்து வழங்கப்பட்டது. நானும் அச்சமயத்தில் அங்கு இருந்தேன். விடுதலைப்புலிகள் சார்பில் தம்பி(பிரபாகரன்), அன்ரன் பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம் ஆகியோர் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் அம்மா, இந்தியாவில் வடக்கு எங்களை அடக்கியாளுகிறது. ஹிந்திமொழி திணிப்பு நடைபெறுகின்றது.
இந்தியாவில் தமிழர்களின் கொடியை டெல்லியில் பறக்க விடமுடியாது. தமிழர்களின் கொடியை நாட்டுவதென்றால் தனி நாடு தேவை. அந்த தனித் தமிழ் நாட்டினை அமைக்க கூடியவர் நீங்கள் தான். தனி ஈழத்தின் கொடி ஐ.நா.சபையில் இருக்கவேண்டும். அதற்கான அச்சாணியாக இந்த நான்கு கோடி ரூபா நிதியை புரட்சித்தலைவர் முற்பணமாக வழங்குகின்றார் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிக் கையளித்திருந்தார்.
இருப்பினும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர் புலிகள் அமைப்பு தொடர்பில் அம்மா
வருத்தமடைந்திருந்தார். இருப்பி னும் உண்மை நிலைமைகள் எடுத்து ரைக்கப்பட்ட பின்னர் நான் விரும்பும் ஆட்சி டெல்லியில் அமைந்தால் தனி ஈழத்தினை அமைத்து தருவேன் என்று தமிழக சட்ட மன்றத்திலேயே தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
கேள்வி:- மூத்த அரசியல்வாதியான நீங்கள் தற்போதைய சூழலில் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?
பதில்:- விடுதலைக்காக போராடிய போராளிகள் பலர் உலகளவில் இருக்கின் றார்கள். இருப்பினும் ஈழத்தில் தமிழர்
கள் அந்த பூர்வீக மண்ணின் மைந்தர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு அவர்களுக் கான அடிப்படை உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சிங்கள, பேரினவாதத்தினை வடக்கு ,கிழக்கில் பரப்ப முயலும் ஆட்சியாளர்களுக்கு பதிலடி வழங்கும் வகையில் அங்குள்ள தமிழ் மக்களின் தலைவர்கள் வேற்றுமை களை மறந்து, அதிகாரத்துக்கான மோதல் நிலை அரசியலைக் கைவிட்டு ஒன்றிணைய வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் சாசன ரீதியான உரிமைகளை பெற்றுத்தர வேண்டும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவேண்டும். புரட்சித்தலைவர், அம்மா வழியிலேயே தற்போதைய முதலமைச்சர் உள்ளிட் ஒட்டுமொத்த கழகமே ஈழத்தமிழருக்கான உதவிகளை என்றுமே பின்னிற்காது வழங்கும்.
( ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM