புறக்கோட்டை வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் பிரதான சந்தேக நபராக கருதப்படும், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய தற்போது டுபாயில் உள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர் 'கெசல்வத்தே தினுக'வின் நான்கு மாடி வீடும் அதன் அருகில் உள்ள மற்றொரு வீடும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. 

வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் உள்ள இந்த வீட்டை அதிரடிப் படையின் விஷேட பாதாள உலகக்குழு கட்டுப்பாட்டு பிரிவு சுற்றிவளைத்த நிலையில், வீட்டில் இருந்த தினுகவின் மனைவி வீட்டுக்கு வெளியே பையொன்றினை வீசியுள்ளார்.

 இந் நிலையில் அந்த பையை அதிரடிப் படையினர் மீட்ட நிலையில் அதில் இருந்து  எம்.எம். 9 ரக துப்பாக்கியொன்றும் தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வீட்டை சோதனை செய்த அதிரடிப் படையினர் தினுகவின் மனைவியையும், அவ்வீட்டில் இருந்த மேலும் இரு இளஞர்களையும் கைது செய்துள்ளனர்.

 இதனையடுத்து தினுகவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் குறித்த வீட்டுடன் பக்கத்தில் அமைந்திருக்கும் மற்றொரு வீட்டையும் அதிரடிப் படையினர் சோதனை செய்துள்ளனர். 

இதன்போது ஊவா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகட்டுடன் கூடிய நவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றினை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் உத்தரவுக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தர்வின் மேற்பார்வையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.