புனித வியாழன் தினமாகிய இன்றைய நாள் இயேசுவின் வாழ்விலும் அவருடைய சீடர்களாகிய கிறிஸ்தவர்களின் வாழ்விலும் முக்கியமான நாள். இன்றுதான் உலகம் உள்ளளவும் தமது ஒப்பற்ற உடனிருப்பை உணர்த்தும் நற்கருணை என்னும் அருளடையாளத்தை இயேசு நிறுவினார். அந்த நற்கருணையைப் பொருளுணர்ந்து கொண்டாடவும், தந்தையாம் இறைவனுக்கும் இத்தரணி வாழ் மக்களுக்கும் உறவுப்பாலமாக விளங்கவும் குருத்துவம் என்னும் அரிய அருள் அடையாளத்தை ஏற்படுத்தியதும் இந்த நாளில்தான். தாழ்ச்சியின் மாட்சியை இந்தத் தரணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்தூதர்களின் காலடிகளை கழுவி, அன்புக் கட்டளையைக் கொடுத்ததும் இந்த நாளே. இயேசுவினுடைய இந்தச் சீரிய செயற்பாடுகளின் ஆழமான அர்த்தத்தை புரிந்து கொள்ள முயல்வோம்.
உயிருள்ள நீங்காத நினைவுச்சின்னம்
இயேசுவும் தமது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தாம் தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்த பொழுது ஒரு நீங்காத நினை வுச் சின்னத்தை, தனது உயிருள்ள பிரசன்னத்தை விட்டுச்செல்ல விரும்பினார். அதுதான் நற்கருணை. பூச்சியத்திற்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடுகிறான் ஒரு கவிஞன். ஆம் உலகமே கொள்ள முடியாத இறைவன், ஒரு சிறு அப்பத்திற்குள் தன்னை சுருக்கிக்கொள்கிறார், தன்னை குறுக்கிக்கொள்கிறார். இது எப்படிப்பட்ட விந்தையான விடயம்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்
இஸ்ராயேல் மக்கள் பாஸ்கா விழாவை ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடினர். இறைவனுடைய அற்புதமான வழிநடத்தலை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். அதே பாஸ்கா விழாவில் இயேசு புதிய ஒரு பாஸ்காவைக் கொண்டாடுகின்றார். இது என்னுடைய உடல் இது என்னுடைய இரத்தம். இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் கோதுமை அப்பத்தின் வடிவில், திராட்சை இரசத்தின் வடிவில் அடையாள முறையில் இயேசு கொடுக்கின்றார். ஆனால் அடுத்த நாள் பெரிய வெள்ளிக்கிழமை அது நிஜமாக மாறுகின்றது. பெரிய வியாழக்கிழமை அடையாள முறையில் தன் உடலையும் இரத்தத்தையும் கொடுத்த இயேசு, அடுத்த நாள் பெரிய வெள்ளிக்கிழமை மெய்யாகவே சிலுவையில் தன் உடலை உடைத்தார், தன் இரத்தத்தைச் சிந்தினார்.
குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்
இந்த நற்கருணையைப் பொருளுணர்ந்து கொண்டாடவும், தந்தை இறைவனுக்கும் இத்தரணி வாழ் மக்களுக்கும் உறவுப்பாலமாக விளங்கவும் குருத்துவம் என்னும் அரிய அருள் அடையாளத்தை ஏற்படுத்தியதும் இந்த நாளில் தான். இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்லி இறை பணியாளர்களை குருக்களை இயேசு ஏற்படுத்துகின் றார். இறையரசின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் நற்செய்தி பணியாற்றும் அனைத்து கிறிஸ்தவப் பணியாளர்களுக்காகவும் சிறப்பாக இறைவேண்டல் செய்கின்ற நாளாக இந்நாள் அமைகின்றது. தமது வார்த்தையாலும், வாழ்வாலும் கிறிஸ்துவுக்கு சாட்சி பகர இவர்களுக்கு இன்னும் இன்னும் இறையருள் கிடைக்க வேண்டுமென செபிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
படைத்தவன் காண்பித்த பணிவு
தாழ்ச்சியின் மாட்சியை இந்த உலகிற்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவி, பிறரன்புக்குப் பெருமை சேர்த்ததும் இந்த நாளே. பணிவிடை பெறவல்ல, பணிவிடை புரியவே வந்தேன் எனக் கூறிய இயேசு, இன்று தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் பணிவிடை புரிந்து முன்மாதிரி காட்டுகின்றார். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள் என இன்று எமக்கு அன்புக்கட்டளை கொடுக்கின்றார்.
யோவான் நற்செய்தியில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி சொல்லப்படவில்லை. மாறாக இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்ச்சியே விபரிக்கப்படுகின்றது. தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு (யோ 13: 14) என்ற வார்த்தைகள் இயேசு தம்மை சுய வெறுமையாக்கலுக்கு உட்படுத்துகின்றார் என்பதை குறிக்கின்றது. இது அரச, இறை மகிமையை கழைந்து விடுவதன் அடையாளம். ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார் என்ற வார்த்தைகள் அடிமைகளின் நிலையை எடுத்துக்கொண்டார் என்பதைக் குறிக்கின்றது.
நமக்குத் தரப்பட்ட வாழ்க்கைப் பாடம்
தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்படுவதை இயேசு காண்கிறார். தாழ்ச்சி பற்றி இயேசு சொல்லிப் பார்த்தார். அவருடைய சீடர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே செயல் மூலம் விளக்கம் கொடுக்கின்றார்.
பாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை. அதிகார மும், அகங்காரமும், நான் என்ற தன்மு னைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சியின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்கு வாழ்க்கைப்பாடமாக, செய்முறைப் பயிற்சியாகச் செய்து காட்டுகின்றார்.
எனவே இன்றைய புனித நாள் நமக்குத் தரும் நலமான, நயமான சிந்தனைகளை உள்வாங்கி அர்த்தமுள்ள வகையில் நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோமாக.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM