நோர்வூட் நகருக்கு அருகாமையில் நேற்று  மாலை இரு கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேசபையில் தலைவர் தெரிவில் ஏற்பட்ட முறுகல் நிலையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட காரணம் என  பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இம் மோதல் சம்பவத்தில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் கல்வீச்சுக்குள்ளாகி காயமடைந்து இருப்பதாகவும் அவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜின் வாகனமும், இம் முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் தெரிவான பா.சிவநேசனின்  வாகனமும் சேதமடைந்துள்ளன.

மோதலின் பின் நகரில் மற்றும் ஏனைய பகுதிகளில் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.