டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் , இதேபோன்று விரைவில் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார் என குறிப்பிட்டுள்ளது. 

 

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றது.

 இதன்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

இதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில் ,

உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சர்வதேச பொலிசாரின் அல்லது குறித்த வெளிநாட்டின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் செயற்பட்டமையினால் தற்போது டுபாய் பாதுகாப்பு தரப்பினால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரது கைது நேற்று முன்தினமே இடம்பெற்றது. அவரை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே போன்று அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார். இரண்டு விடயங்களும் வெவ்வேறு என்றாலும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.