(எம்.எப்.எம்.பஸீர்)

 பாதையில் செல்லும் போது உடலில் மோதியதற்காக, வாசிகசாலையினுள் சென்று இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இந்த தீர்ப்பை அளித்தார்.

 இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்னர் பாடசாலை செல்லும் இளைஞர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பிலும், அவரை காப்பாற்ற வந்த அவரது நண்பனை கொலைசெய்ய முயன்றமை தொடர்பிலும்  சட்ட மா அதிபரால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் தீர்ப்பளித்தே நீதிபதி மரண தண்டனை விதித்தார்.

 அங்குலான பகுதியைச் சேர்ந்த 51 வயதான  சுதத் பெர்ணான்டோ, 55 வயதான காமினி பீரிஸ் ஆகிய உறவுக்காரர்கள் இருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

1985 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில், இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தமை மற்றும் மற்றொருவரை கொலைசெய்ய முயற்சித்தமை தொடர்பில் சட்ட மா அதிபரால் 5 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டது. 

இந் நிலையில் வழக்கு விசாரணைகளின் இடை நடுவே மூன்று பிரதிவாதிகள் இறந்துவிட்ட நிலையில், எஞ்சிய இரு பிரதிவாதிகளுக்கும் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் சட்ட மா அதிபர் சார்பில் குற்றச் சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி நீதிபதி இந்த தீர்ப்பை அளித்தார்.  கல்கிசை பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டார (50724) பொலிஸார் சார்பில் மன்றில் ஆஜரானதுடன் வழக்கை சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி இஷாரா ஜயரத்ன நெறிப்படுத்தினார்.