(எம்.எப்.எம்.பஸீர்)

 சுட்டுக் கொலைசெய்தல், அச்சுறுத்தி கப்பம் பெறுதல், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விபசாரம் உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புபட்ட அனைத்து திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்க விஷேட செயற்றிட்டம் நடை முறைப்படுத்தப்படும் நிலையில், பாதாள உலகக் குழுவினரைக் கைது செய்ய சீட்டா குறூப் களத்தில் இறக்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் மோட்டார் சைக்கிள் சுற்றிவளைப்பு படையான  சீட்டா குறூப் சிறு சிறு குழுக்களாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும் பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்ய களத்தில் இறக்கப்பட்டுள்ளது. 

சீருடையிலும் சிவில் உடையிலும் இந்த படையணியினர் பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களைத் தேடி விஷேட சுற்றி வளைப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் நேரடி கட்டுப்பாட்டில் திட்டமிட்ட குற்றங்களை ஒழிக்கும் விஷேட அதிரடிப்படை பிரிவின் பிரதான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் வழி நடத்தலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 அதன்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உளவுப் பிரிவுக்கு கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைவாக, கடந்த இரு நாட்களில் இந்த சீட்டா குறூப், ஏற்கனவே களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட  பாதாள உலகத் தலைவன் சமயனின் சகாக்களைத் தேடி தலங்கம, அத்துருகிரிய மற்றும் யக்கலை பகுதிகளில் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் தற்போது இலங்கையில் இருந்து இந்திய ஔஉடாக தப்பிச் சென்ரு டுபாயில் இருப்பதாக நம்பப்படும் அங்கொட லொக்கா எனும் பாதாள உலக கூழ்வின் உறுப்பினர்களைத் தேடி வெயாங்கொடை நிட்டம்புவ பகுதிகளிலும் தேடுதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும் இதன்போது தேடப்பட்ட உறுப்பினர்கள் அப்பகுதிகளில் இருந்து தப்பிச் சென்றிருந்ததாக அறிய முடிகின்றது. இந்த சுற்றி வளைப்புக்களின் போது குறிப்பிட்ட பாதாள உலக உறுப்பினர்களின் உறவினர்களுக்கு பொலிசார் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந் நிலையில் பாதாள உலக நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர இவ்வாறான விஷேட சுற்றிவளைப்புக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வருடத்துக்குள் மட்டும் பாதாள உலக குழுவுடன் தொடர்புபட்ட 21 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பிரதானமாக இதில்  தற்போது இத்தாலியில்  உள்ளதாக நம்பப்படும் மாகந்துரே மதூஷின் கூழுவினருக்கும் சமயனின் கூழுவினருக்கும் இடையிலான மோதல்கள்  அவதானிப்புக்கு  உள்ளாகியுள்ளன.  அதன்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதாள உலக கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கைகளின் போது தடல்லகே மஞ்சு எனும் பாதாள உலக தலைவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில்,  மாகந்துரே மதூஷ்,  ஆமி சம்பத், அங்கொட லொக்கா, சமயன், தடல்லகே மஞ்சு, கெசல்வத்த தினுக ஆகிய பாதாள உலக தலைவர்களின் சகாக்கள் 20 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அதில் மாகந்துரே மதூஷின் சகாவான சிந்தக,  பேலியகொட பெரல் சங்க, கட்டானே தினுக, கிராண்ட்பாஸின் பொடி உன, கெளனி ஹூனா, மோதர சாரங்க, குடு நுவன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். 

 இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகள் பலவற்றிலும் போதைப்பொருள் வர்த்தகம் விபச்சார நடவடிக்கைகள் பரவலாக இடம்பெறுவதாக அபயாகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான  பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் தெரிவித்தார். 

அவர் அவரது அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுத்த விஷேட ஆய்வின் ஊடாகவே இவை தெரியவந்துள்ளதாகவும் அது தொடர்பில் அரசின் உயர் மட்டத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக மாலை 6 மணியின் பின்னர் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடம், மருதானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதிகள், முகத்துவாரம், வாழைத் தோட்டம், வெல்லம்பிட்டி, பொரளை, கல்கிசை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் இவ்வாறான போதைப்பொருள் வர்த்தகங்கள் மற்றும் விபசார நடவடிக்கைகள் பரவலாக இடம்பெறுவதும் இதனால் பல இளைஞர் யுவதிகள் பாதிக்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.