பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் வாடகை வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த திருநங்கையும் அவரது நண்பரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் திருநங்கையர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அரசு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.  அந்த வகையில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கையர்களுக்கு முதன்முதலாக சட்ட அங்கீகாரம் அளித்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் உள்ளது.

இந்நிலையில் இங்குள்ள கைபர்-பக்துங்வா மாகாணத்துக்குட்பட்ட பெஷாவர் நகரில் நேற்று தனது ஆண் நண்பருடன் வாடகை வண்டி ஒன்றில் சென்று கொண்டிருந்த ஒரு திருநங்கையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இத் தாக்குதலில் உயிரிழந்த திருநங்கை மற்றும் அவரது நண்பரின் உடல்களை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கைபர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்ததோடு இச்சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.