(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால், முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்ப்ட்டுள்ளார். 

டுபாய் விமான நிலையத்தில் வைத்து வெளிநாடொன்றுக்கு செல்லும் நோக்குடன் வந்த உதயங்க வீரதுங்கவை அந் நாட்டு பாதுகாப்பு தரப்பு கைது செய்து தற்போது அபுதாபிக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் தற்போது வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அது குறித்து அவர்கள் அறிவிக்கவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர்  வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 

அதனால் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்தோ அடுத்த கட்டம் தொடர்பிலோ தீர்மானிக்க முடியாதுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அது தொடர்பில் செயற்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 இந் நிலையில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ  தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ள நிலையில்,  உதயங்க தொடர்பில் விசாரணை அதிகாரிகளோ ஏனையவர்கள் ஊடாகவோ கைது  தொடர்பில் தனக்கு தகவல் அளிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்  உதய்ங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளாரா என நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

 அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதனையும் தன்னால் வெளிப்படுத்த முடியாது எனவும் குறித்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு தானும் ஆராய்ந்து வருவதாகவும் தனக்கு உத்தியோகபூர்வ தகவல் கிடைத்தால் உறுதியாகக் கூற முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் பின்னர் அவரை தொடர்புகொள்ள முற்பட்ட போதும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.

இந் நிலையிலேயே, இன்று இலங்கையில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டாரா இல்லையா என பரவலாக  கேள்வி எழுப்பட்டு வந்தது. இதற்கு டுபாயில் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லாமையால் பொலிஸார் சார்பில்  அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறினர்.

இந் நிலையிலேயே உதயங்க வீரதுங்க டுபாயில் கைது செய்யப்பட்டதை பொலிஸ் தலைமையகத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் உறுதி செய்ததுடன் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.