எம்மில் பலரும் திருமணத்திற்கு பிறகு சொந்த வீடு என்பது தான் பெருங்கனவு. ஒரு சிலர் இதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டு நாள் நேரம் பார்க்காமல் உழைக்கலாம். ஒரு சிலர் குழந்தை குட்டிகளுடன் இந்த கனவை நோக்கி தங்களின் கடுமையான பயணத்தை தொடர்வர்.

இதன் முதல் நிலையான தங்களிடமுள்ள நகைகளை அடகு வைத்து நிதியை திரட்டுவர். பிறகு வங்கிகளிலும், தம்பதிகள் இருவரும் பணியாற்றும் அலுவலகங்களிலும் தங்களின் சக்திற்கு ஏற்ப கடன் வாங்குவார்கள். பிறகு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு சொந்த வீட்டைப் பற்றிய கனவுகளுடன் உலா வருவர். பிறகு அவர்களின் கடுமையான உழைப்பிற்கு இறுதி வடிவம் பெறம் போது, அதாவது கிரகபிரவேசத்திற்கு நாள் குறித்த பிறகு அவர்களுக்குள் ஒரு சூன்ய உணர்வு தோன்றும். அது அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்துவிடும்.

அவர்கள் தான் வெற்றியைப் பெறவிருக்கிறார்களே.? அவர்களுக்கு ஏன் சூன்ய உணர்வு தோன்றவேண்டும்? 

ஒரு சிலருக்கு இது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு சக்ஸஸ் டிப்ரஸன் என்று பெயர். இதற்கு அடிப்படை காரணம் மனதில் தோன்றும் வெற்றிடம். இத்தனை நாள், மாதம், ஆண்டுகள் இந்த சொந்த வீட்டிற்காக ஓடியாடி உழைத்தார்கள். அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டது என்ற எண்ணம் மனதில் உருவாகிறது. அதனுடனேயே இவர்களுக்கு ‘இனி என்ன வேலை?’ இனி தான் வேலையேயில்லை? போன்ற எண்ணமும் உடன் வரும். இது தான் அந்த வெற்றிடத்தை உருவாக்குகிறது.

எதிலும் ஆர்வமின்மை, திருப்தியின்மை, தேவையற்ற அல்லது காரணமற்ற கோபம்,கவலை, எதிர்பார்ப்புகள் ஈடேறாதது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தும் தனிமையாக இருக்கிறோமோ என்ற உணர்வு.... இது போன்ற சிந்தனை மேலோங்கியிருந்தால் இது தான் சக்ஸஸ் டிப்ரஸனின் அறிகுறி என்கிறார்கள் உளவியல் மருத்துவ நிபுணர்கள்.

இதற்கு நிவாரணம் என்ன? என்றால் உங்களது மனம் தான். ஒரு லட்சியத்தை எட்டி அடைந்தவுடன் அடுத்த இலட்சியத்தை நிர்ணயித்துக் கொள்வது அல்லது இது எமக்கு மன நிறைவைத்தருகிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வது தான். இறுதியில் இதற்கு நிவாரணமும், தீர்வும் தருவது உங்களது மனம் தான். அதனை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

டொக்டர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.