மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கொலைக்குற்றம் ஒன்றில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் விடுதலையானர் கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாதோரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

இச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மஜித்மாவத்தை புரத்தைச் சேர்ந்தவராவார்.

கத்திக்குத்திற்கு இலக்கானவர் கடந்த 2016 ஆம் ஆண்டு  ஏறாவூர் பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இவர் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில்  மஜித்மாவத்தை புரத்தில் தனது சகோதரியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதவர்கள் அவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர் மட்டு. போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.