கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரியற்ற (டியுடி பிரி) பல்பொருள் அங்காடியில் தொழில்புரியும் பணியாளர் ஒருவர் வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சிக்கையில் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரியற்ற பல்பொருள் அங்காடியில் தொழில்புரியும் பணியாளர் ஒருவர் வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயற்சிக்கையில் சுங்க பிரிவு அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தின் போது 30 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு குறித்த சந்தேகநபரை கைதுசெய்யும் வேளையில் அவரிடமிருந்து 41 இலட்சம் பெறுமதியான சவுதி ரியால் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

500 ரியால் நாணயத்தாள்கள் 200 குறித்த சந்தேகநபரின் சப்பாத்துகளில் வைத்து சட்டவிரோதமான முறையில் பதுக்கி கடத்த முயற்சிக்கையிலேயே குறித்த நபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ள சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.