ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான முக்கிய அமர்வொன்று கடந்த புதன்கிழமை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்தன. ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் முகாமிட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், புலம்பெயர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், தென்னிலங்கை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் என்ன நடக்கப்போகின்றது என்பதை மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஜெனிவா வளாகம் பரபரப்பாகவே காணப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் என்ன கூறப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் காணப்பட்டது. ஒருசிலர் செய்ட் அல் ஹுசைன் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை பிரயோகிக்கமாட்டார் என்றும் ஒருசிலர் கடும் அழுத்தங்களைப் பிரயோகிப்பார் என்றும் கூறிக்கொண்டிருந்தனர். முழு ஜெனிவா வளாகமே ஹுசைனின் அறிக்கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது, அதன் முன்னேற்றம் எவ்வாறு காணப்படுகின்றது என்பது குறித்த மதிப்பீட்டையும் அடுத்தகட்டமாக ஐ.நா. மனித உரிமை பேரவை என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பான அறிவிப்பையுமே செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக வெளியிடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
தொடர்ந்து பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜெனிவா நேரம் 3 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமானது. செய்ட் அல் ஹுசைன் முதலில் விவாதத்தை ஆரம்பித்து இலங்கை தொடர்பில் உரையாற்றுவார் என எதிர்பார்த்த தரப்பினருக்கு ஏமாற்றமே கிட்டியது. காரணம் அவ் விவாதத்தில் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து செய்ட் அல் ஹுசைன் கலந்துகொள்ளவில்லை. எனினும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரதி ஆணையாளர் கேட் கில்மோர் அம்மையார் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அதாவது செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக மதிப்பீடு செய்து தயாரித்த அறிக்கையையே பிரதி மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டார்.
அவ்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட வகையிலேயே இலங்கை தொடர்பில் காரசாரமான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி அதன்பின்னர் உரையாற்றிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இலங்கை தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன. அத்துடன் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நஷ்டஈடு வழங்குதல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்வற்றுக்கான ஐ.நா.வின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீபின் உரையும் இலங்கை தொடர்பாக காரசாரமாக அமைந்திருந்தது. முதலில் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையுடன் ஈடுபாட்டுடன் செயற்படும் இலங்கையின் செயற் பாட்டை வரவேற்கின்றோம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் இலங்கை தாமதத்தை கடைப்பிடிக்கின்றமை கவலைக்குரியதாகும். மேலும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் ஜெனிவா பிரேரணையை இலங்கை முழுமையாக அமுல்படுத்தும் என்பது சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளது. அத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 20 மாதங்கள் கடந்தே காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அதிருப்தியடைகின்றோம்.
அத்துடன் காணிகளை மீள் வழங்குவதில் தாமதம் நீடிக்கின்றது. காணிகளை தொடர்ந்து அபகரித்தால் நம்பிக்கையை கட்டியெழுப்புவது கடினமாகும். மேலும் காணிகளுக்கான நஷ்டஈடுகள் சுயாதீன பொறிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறிருக்க சர்வதேச மனித உரிமை மீறல்கள் அத்துடன் சர்வதேச மனிதாபிமான மீறல்கள் போன்றவற்றுக்கெதிராக தண்டனை வழங்காமலிருக்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் சர்வ ேதச பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம். அத்துடன் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை மக்கள் மீதான இனரீதியான தாக்குதல் குறித்து நாம் கவலையடைகிறோம்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலினால் 12 நாட்களுக்கு அவசரகால நிலையை கொண்டு வர நேர்ந்தது. சித்திரவதைகள் தொடர்வதாகவும் மனித உரிமை காப்பாளர்களை கண்காணிப்பது தொடர்பாகவும் அறிக்கையிடப்படுகிறது.
எப்படியும் இலங்கையின் இந் நிலைமை தொடர்பிலும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் குறித்தும் ஐ.நா. மனித உரிமை பேரவை அவதானத்துடன் இருக்க வேண்டும் என கோருகிறோம். இவ்வாறு மிகவும் காரசாரமான வகையில் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை அமைந்திருந்தது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்குமா என்ற சந்தேகம் தமக்கிருப்பதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாதநிலை காணப்படுவதாகவும் ஹுசைனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் இவ் விவாதத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை தொடர்பில் ஓரளவு திருப்தி அடைந்ததை காணமுடிந்தது. உடனடியாகவே இலங்கை சார்பாக இவ் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கையானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்படுகிறது. மனித உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். காணாமல் போனோர் குறித்து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 70 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. நஷ்ட ஈடுகள் வழங்கும் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது. பயங்கரவாதம் தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும். அண்மைய காலங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் கவலையடைகிறோம். இதன் பின்னர் இவ்வாறு வன்முறைகள் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டோம். இலங்கையில் அனைவரும் சமஉரிமையுடன் வாழ உரிமையுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தின் பதிலானது வழமையாக ஜெனிவாவில் முன்வைக்கப்படும் ஒரு விடயமாக காணப்பட்டது.
இந்நிலையில் விவாத்தில் உரையாற்றிய அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டனர். அதாவது ஐ.நா. பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். காணாமல் போனோர் அலுவலகம் சாதகமாக இருக்கிறது. ஆனால், தாமதமான நிலைமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சிறுபான்மை இன மக்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். வைராக்கிய பேச்சை நிறுத்த வேண்டும். அதிகார பரலாவக்கலை முன்னெடுத்து காணாமல் போனோர் மீதான உண்மையை அறிய வேண்டும் என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
சர்வதேச நாடுகளின் அறிக்கைகளைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களே முதன்மை பெற்றிருந்தன. குறிப்பாக சிறுபான்மை மக்களுக்ெகதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அது தொடர்பில் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனையடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் இலங்கை தொடர்பாக சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதில் ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். அதாவது 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் இலங்கையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன். பல்வேறு விஜயங்களை அங்கு நான் மேற்கொண்டிருக்கின்றேன். கடந்தவருடமும் இலங்கைக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அதுதொடர்பான எனது அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் சமர்ப்பிப்பேன்.
பழைய விடயங்கள் அனைத்தையும் இங்கு நான் பேசவில்லை.மாறாக இருவாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற முஸ்லிம் சமூகத்தினர் மீதான தாக்குதல் குறித்து சில விடயங்களை முன்வைக்கின்றேன்.
ஒரு பரந்துபட்ட ரீதியான நிலைமாறுகால நீதி குறித்த பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டுமென நான் ஏற்கனவே பரிந்துரை முன்வைத்திருக்கின்றேன். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தின் கீழ் இப் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
காணாமல்போனோர் அலுவலகத்துக்கு ஆணையாளர்களை நியமித்துள்ளமை எதிர்பார்ப்புக்கான ஒரு சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளது. அதில் சில கேள்விகளும் காணப்படுகின்றன. குறிப்பாக தாமதமும் காணப்படுகின்றது. இவ் அலுவலகம் தொடர்பில் ஈடுபாட்டுடன் செயற்படுமாறு நான் அனைத்துத் தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
காணாமல்போனோர் அலுவலகமானது ஒரு ஆரம்பம் மட்டுமேயாகும். இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்ெகாரு முறை ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன. இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.
இனவன்முறைகள் இலங்கையில் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. 1971 ஆம் ஆண்டு மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உண்மையைக் கண்டறியவும் நீதியைப் பெறவும் நஷ்டஈடு பெறவும் உரிமையுள்ளது. அத்துடன் முழு சமூகமும் மீள் நிகழாமையை அனுபவிப்பதற்கு உரிமை கொண்டவர்கள். அத்துடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமை நிறுத்தப்படவேண்டும். தற்போது இலங்கையின் தலைமைத்துவம் அரசியல் தலைமைத்துவம் எதிர்க்கட்சியினர், மதத்தலைவர்கள், இராணுவத்தினர், உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிடமும் நான் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அதாவது மூன்று மாதங்கள் அல்லது இரண்டு வருடங்கள் அல்லது ஏழு வருடங்களின் பின்னர் உங்கள் சமூகத்தின் தாயொருவர் உங்களிடம் வந்து எனது மகன் கடத்தப்படுவதற்கு அல்லது கொல்லப்படுவதை தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அவருக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
2015ஆம் ஆண்டு நான் முன்வைத்த விடயங்களின் படி அரசியலமைப்பு ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பிராந்தியத்திலேயே நிரந்தர சமாதானம் கொண்ட நாடாக இலங்கை சாதனை படைத்திருக்கலாம். எப்படியிருப்பினும் இலங்கைக்கு தீர்க்கமான மற்றும் உற்சாகமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது. இலங்கை மக்கள் அனைவரும் தாம் சமத்துவமிக்கவர்கள் மற்றும் அடிப்படை உரிமையைக்கொண்டவர்கள் என்பதை உணர்த்தும் வகையிலான அரசியலமைப்பு இலங்கைக்கு தேவைப்படுகின்றது. தொடர்ந்தும் இதற்காக காத்திருக்கவேண்டாம். பெருமையாகவும் அழுத்த ரீதியாகவும் இச் செயற்பாட்டை முன்னெடுங்கள். அந்த செயற்பாட்டை விரைவாக அமுல்படுத்துங்கள் என்று பப்லோ டி கிரீப் தனது இலங்கை குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இம்முறை இலங்கை பிரச்சினை தொடர்பில் மக்கள் எதிர்பார்த்த பதில் முழுமையாக ஜெனிவாவில் கிடைக்காவிடினும் ஓரளவு பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தி அடையும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவை நகர்வுகளை முன்னெடுத்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் சர்வதேச சமூகத்தையும் ஐ.நா. மனித உரிமை பேரவையையும் மட்டுமே நம்பியிருக்கின்றனர். ஜெனிவாவில் கூடியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களிலிருந்து இதை அறிய முடிந்தது.
எனவே அரசாங்கம் இந்நிலைமை குறித்து கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை சர்வதேச சமூகமும் ஐக்கியநாடுகள் சபையும் புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வெறுப்பை இலங்கை அரசாங்கம் சந்தித்துள்ளதாகவே தெரிகின்றது.
கடந்த மூன்றுவருடகாலத்தில் இலங்கைக்கு முழுமையாக ஆதரவளித்து வந்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தற்போது அழுத்தம் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது. எது எப்படியிருப்பினும் மற்றுமொரு ஜெனிவா கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கிறது. இலங்கை தொடர்பான விவாதமும் முடிவடைந்திருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்காக ஏங்கிக்கொண்டே இருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை என்ன செய்யப்போகின்றது என்பதே அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாகும். அதற்கு யார் பதிலளிப்பார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
(எஸ்.ஸ்ரீகஜன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM