( எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட வெளிநாட்டு மதுபானங்களுடன் நபர் ஒருவரை கொட்டாஞ்சேனையில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக  திடீர் சுற்றி வளைப்பொன்றினை முன்னெடுத்து வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கைப்பற்றியதாகவும் அது தொடர்பில் அங்கிருந்த 44 வயதான ஒருவரையும் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வெள்ளிக்கிழமை பிற்பகல்  ஒரு மணிக்கு இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கே.சி.சிரில் சீ. பெரேரா மாவத்தையில் உள்ள இடமொன்றே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது அந்த கட்டிடத்தில்  ஷம்பெய்ன் போத்தல்கள் மற்றும் வைன் போத்தல்கள் என 15,431 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் இருந்துள்ளன.

இந் நிலையிலேயே இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 44 வயதான கொள்ளுப்பிட்டி யூ.ஆர்.டி. மெல் மாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.