பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தூதரக வளாகத்திலுள்ள புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் உத்தயோகபூர்வ அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள ஒரே ஒரு பௌத்த விகாரையான சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு இன்றுபிற்பகல் விஜயம் செய்தார்.

முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி , அவ்விகாரை வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துடன் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து பௌத்த மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மேல் மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய அகுரட்டியே நந்த தேரர், சங்கைக்குரிய பகமுனே சுமங்கல தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய நாபிரித்தன்கடவல ஞானரத்ன நாயக்க தேரர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நேபாளம், இந்தியா, மியன்மார், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவர்களும் உயர் ஸ்தானிகர்களும் கலந்துகொண்டனர்.