(எம்.எப்.எம்.பஸீர்)

தொடர்ச்சியாக கொழும்பிலும் தெற்கிலும் இடம்பெறும் பாதாள உலகக்குழுக்களின் மோதல்கள், கொலைகளின் பின்னணியில் இருக்கும் பிரதான புள்ளியான, தற்போது டுபாயில் வசிக்கும் மாகந்துரே மதூஷை கைதுசெய்ய அரசியல் தலையீடு அவசியம் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

டுபாய்க்கும் இலங்கைக்கும் இடையே சட்ட ஆட்சி எல்லை சட்டம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தங்களும் இல்லாத நிலையில் மாகந்துரே மதூஷை  பொலிஸ் நடவடிக்கைகள் ஊடாக  கைது செய்ய சாத்தியம் இல்லை என, மதூஷ் குழுவினரின் கொலை, குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்கு வெளிப்படுத்தினார்.

 எனவே மதூஷை கைது செய்வதென்றால், இராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கைகள் அவசியம் என குறிப்பிட்ட அவர், அது தொடர்பில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் செய்யப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்கட்டினார்.

கடந்த மூன்று மாதங்களில் 8 கொலைகள்  பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கையால் இடம்பெற்றுள்ள நிலையில் இவற்றின் பின்னணியில் மதூஷ் குழுவினரும் அவர்களுக்கு எதிரான குழுவினரும் உள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையிலேயே மதூஷை கைதுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் பொலிஸார் உள்ளனர். 

எனினும் அவர் டுபாயில் இருப்பதால் அவரைக் கைது செய்வதில் சிக்கல் நீடிக்கும் நிலையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் பொலிஸ் அதிகாரி இந்த விடய்ங்களை வெளிப்படுத்தினார்.