(எம்.மனோசித்ரா)

பிரதமருக்கு எதிராக தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்பகாலத்தில் ஜனாதிபதிக்கு எதிரானதாக மாறலாம். தற்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அவ்வாறு தான் உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்தின்படியே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அஅர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

பெற்றோலிய அமைச்சின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என தற்போது ஆரம்பித்துள்ள விடயம் எதிர்காலத்தில் சபாநாயகர் பின்னர் ஜனாதிபதி என செல்ல வாய்ப்புக்கள் உண்டு. 

அதனை பற்றி நம்மால் தனிப்பட்ட ரீதியில் முடிவினை எடுக்க முடியாது. அது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மற்றும் அமைச்சரவையுடன் தொடர்புடைய விடயமாகும். 

மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக எமக்குத் தெரியாது. எனவே பிரேரணையில் கையெழுத்திட்டவர்கள் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது சுதந்திர கட்சி தலைவர் என்ற வகையில் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவே ஆகும். 

எனினும்  ஊழல்வாதிகளை கைதுசெய்து தண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் ஏற்படுத்திய காலதாமதமே உள்ளுராட்சி தேர்தலில் அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்தமைக்கு காரணம் ஆகும். எனவே மக்களின் தேவையை நாம் தற்போது நன்றாக  உணர்ந்துள்ளோம். அரசாங்கத்திற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காலம் இருக்கின்றது. இவ்விரு வருடத்தில் நாம் விட்ட பிழைகளைத் திருத்தி மக்கள் எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்றுவோம். 

கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மாத்திரம் வைத்துக்கொண்டு மஹிந்த தரப்பினர் அடுத்த தேர்தலிலும் பெரும்பான்மை பெறுவர் என தீர்மானித்துவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.