தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை 10 மணிக்கு தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இத்தோட்டத்தில் தொழில் புரியும் கள உத்தியோகத்தர் ஒருவருக்கும், தொழிலாளர்  ஒருவருக்குமிடையில் கடந்த  மாதம் 16ம் திகதி முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும், லிந்துலை பொலிஸ்  நிலையத்தில்  முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருவர் மத்தியில் பரஸ்பர உறவை ஏற்படுத்தியதுடன் இருவருக்கும் தொழில் வழங்குமாறு தோட்ட நிர்வாக அதிகாரிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தோட்ட அதிகாரி குறித்த கள உத்தியோகத்தருக்கு மாத்திரம் தொழில் வழங்கியதுடன்,  தொழிலாளிக்கு தொழில் வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டித்தும் உடனடியாக சம்மந்தப்பட்ட தொழிலாளிக்கு தொழில் வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்கும்படியும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.