இலங்கைக்கு எதிரான  இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை 2-1 எனும் அடிப்படையில் இந்தியா கைப்பற்றியது.நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தொடரை கைப்பற்றியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட வந்த இலங்கை அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது, டி.எம் டில்ஷான் ஒரு ஓட்டத்துடன் ஏமாற்றமளித்தார்.

தொடர்ந்து, அணித்தலைவர் தினேஷ் சந்திமல் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தனது முதலாவது போட்டியில் களமிறங்கிய அசேல குணரத்னவினால் 4 ஓட்டங்களையே பெற முடிந்தது.இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்டுக்களும் 21 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.இலங்கை சார்பாக தசுன் ஷானக பெற்ற 19 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டமாக பதிவாகியது.

இதன்படி, இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இருபதுக்கு20  போட்டியொன்றில் இலங்கை அணி பெற்ற குறைந்த பட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவானது.

இந்தியா அணி சார்பாக ரவிச்சந்திரன் அஸ்வின்  4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 13.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.தவான்  46 ஓட்டங்களைப் பெற்றார்.போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார்.