(இரோஷா வேலு)

முச்சக்கர வண்டியொன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முகவர்கள் இருவர் இன்று நுரைச்சோலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிலந்த பண்டார தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தல பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியொன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற முகவர்கள் இருவர் இன்று காலை நுரைச்சோலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தின் போது கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 28 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்களை கைதுசெய்யும் வேளையில் இவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கற்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது நீதிவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

எனவே குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்றார்.