தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய கட்டுக்கலை தோட்டத்தை சேர்ந்த 180 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று மாலை 3 மணியளவில் கொழுந்து நிறுக்கும் மடுவத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர் .

தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் முறையாக வழங்கப்படாமையினாலும் குறித்த தோட்டத்தில் தொழில்புரியும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் தொழிலாளர்களை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு பேசுவதாகவும் அவர்களுக்கு மத்திய வங்கியின் ஊடாக வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதிக்கான பற்றுச் சீட்டுக்களை வழங்காமையினாலும் அதனை கண்டித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேவேளை தோட்ட நிர்வாகத்திற்கு இவ்விடயம் தொடர்பாக பல முறை தொழிற்சங்கங்களின்  தலைவர்கள் மூலம் அறிவித்த போதிலும் தலவாக்கலை தோட்ட நிர்வாகம் இப்பிரச்சினை தொடர்பில் அலட்சிய போக்குடன் செய்ற்படுவதாக தோட்ட மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

மேலும் தோட்ட பெண் தொழிலாளர்களின் வேலையை அதிகரிக்கும் வகையில் வெளிக்கள உத்தியோகத்தர் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.  

இப்பிரச்சினை தொடர்பாக இன்று  காலை அட்டன் தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாலேயே  ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் தலவாக்கலை தோட்டத்தில் நோயாளிகளுக்காக பயன்படுத்த வேண்டிய அம்புலன்ஸ் வாகனமானது தோட்ட நிர்வாகத்தின் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் விசனம் தெரிவித்தனர்.

எனவே இல்வாறு பல பிரச்சினைகளுக்கு காரணகர்த்தாவாக வெளிக்கள உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியே தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.