(எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும். எனினும் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வெற்றிகளை போலவே தோல்விகளையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

 

இலங்கை அணி தோற்றாலும் கூட நாம் பொது அணியினை வைத்து எதிர் அணியினை வீழ்த்துவோம் என்பதை பங்களாதேஷ் அணி மறந்துவிட்டது எனவும் அவர் கூறினார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது  ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி ரோஹினி குமாரி விஜேரத்ன தம்புள்ளை விளையாட்டரங்களில்  இடம்பெற்ற கிரிக்கட் போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் வருமானம் குறித்தும், இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றமைக்கு அமைச்சர் பதவி விலகுவாரா என்ற கேள்விகளை எழுப்பிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுவதில்லை. 51 ஒருநாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளது,  51 பெண்கள் கிரிக்கட் போட்டிகளும் இடம்பெற்றுள்ளது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான  2 டெஸ்ட் போட்டிகளும், 4 ஒருநாள் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டிகளின் மூலம் 2 கோடியே 94 இலட்சத்து 56 ஆயிரத்து 270 ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. 

மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும். 

எந்த அணியாக இருந்தாலும் அல்லது கட்சியாக இருந்தாலும் அதன் தலைவரே பொறுப்புக்களை ஏற்றுகொள்ள வேண்டும். 

எனினும் இந்த வெற்றி தோல்விகள் குறித்து நாம் கலந்துரையாடி வருகின்றோம். இலங்கை கிரிக்கெட் அணி தற்போது புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் செயற்பட்டு வருகின்றது. 

இதில் பல வெற்றிகள் அதேபோல் தோல்விகளையும் சந்தித்துள்ளது. வெற்றிகளை ஏற்றுக்கொள்வதைப் போலவே தோல்விகளையும்  நாம் ஏற்றுகொள்ள வேண்டும். ஒரு அணி எப்போதுமே வெற்றிகளை தக்கவைத்துக்கொள்வதில்லை. கிரிக்கெட் விளையாட்டின் இயல்பும் அதுவே என அவர் மேலும் தெரிவித்தார்.