(ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்  மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி  யாவசிடாவையும், அமெரிக்காவின்  ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். 

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும்  அவர்   வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எம். ஏ. சுமந்திரன்  அங்கு இந்த  சந்திப்பை  நடத்தியுள்ளார்.  

இது குறித்து அவர்  மேலும் கூறுகையில்,  

எமது முதலாவது கூட்டத்திலே ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்  மற்றும் அவருடன் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி  யாவசிடா ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். 

அண்மையில் இவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தவர்கள். அவர்களுக்கு இலங்கையின் நிலைமை நன்றாகவே தெரியும். அவர்களுடன் உலக தமிழர் பிரதிநிதிகள் தங்களுடைய நிலைபாட்டையும் முன்வைத்தனர். உலக தமிழர் பேரவையினர் எவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தனர் என்றும் எவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள் என்றும் குறிப்பிட்டனர். 

எனினும் இப்போது இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமாக நகரவில்லை, முன்னேற்றகரமான நகர்வுகளில் பல தாமதங்கள் உள்ளன. குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விலகுகின்ற தன்மையினை தொடர்ந்தும் வெளிப்படுத்திவரும்  காரணத்தினால் நாளை நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சில கடுமையான முடிவுகளை சர்வதேச சமூகம் எடுத்தாக வேண்டும் என்பதை மிகவும் திடமாக வலியுறுத்தியிருந்தனர். 

இதன்போது  கருத்து கூறிய அதிகாரிகள் - இது நாடுகளுடைய பேரவை, ஆகவே  நாடுகள் தான் அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். எனினும் தங்களுடைய பங்களிப்பை தாம் சரியாக  செய்வதாக  அதிகாரிகள் எமக்கு உறுதியளித்தனர். 

மேலும் இரண்டாம் கூட்டத்தில் அமெரிக்காவின்  ஐ.நா.வுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவரை சந்தித்தோம். கேலி கரி என்கின்ற தூதுவர்தான் வெளிவிவகார விவகாரங்களுக்கும் பொறுப்பாக உள்ளார். ஆகவே  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் விடுகின்ற அறிக்கையை தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தமது நிலைபாட்டை முன்வைக்கும்.     அதை அமெரிக்கா முன்னின்று வலியுறுத்த வேண்டும் என்றும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்க வரவேற்க வேண்டும் என்பதையும்  நாங்கள் கேட்டுக்கொண்டோம். அவர்கள் கூறும் விடயங்கள் அதற்கு பதில் கூறும் நிலைப்பாடுகளில் அமெரிக்கா  கடுமையான ஒரு நிலைபாட்டை கைக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அவரும் அதற்கு சாதகமான பதிலை கொண்டுத்திருந்தார் எனக் குறிப்பிட்டார்.