(எம்.சி.நஜிமுதீன்)

ராஜபக்ஷகளுக்கும் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களையும் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார்.

Image result for ஜீ.எல்.பீரிஸ் virakesari

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.  அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். அந்த சட்டமூலத்தினூடாக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். எனினும் அந்நீதிமன்றத்தினூடாக திருடர்களைப் பிடிக்கப்போவதில்லை. மாறாக மக்கள் ஆதரிக்கும் அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அந்நீதிமன்றத்தை அமைக்க முனைகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தன தனது ஆட்சிக்காலத்தில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்னெடுத்த விடயங்களைப்போலவே நல்லாட்சி அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்திற்கும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு  எதிராகவும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.