ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தைக் கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி பழையமாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்று யாழ். சென்ற  நிலையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் பத்திரிசியார் கல்லூரி சந்தியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என கோஷங்களை எழுப்பியவாறு அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பத்திரிசியார் சந்தியிலிருந்து புனித பத்திரிசியார்  கல்லூரி நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போதிலும் அவர்களை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இந்தத் திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புனித பத்திரிசிரியார் கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் இராணுவத்தினர் இடம் சரணடைந்தோர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், அருட்தந்தை அதிபராக இருந்த கால பகுதியில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களும் அருட்தந்தை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது பொலிஸார் போராட்டகார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றிருந்தனர்.

அது தொடர்பில் அருட்தந்தை தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்துதருவதாக வாக்குறுதி அளித்து பொலிஸார் எங்களில் மூவரை அழைத்து சென்றனர். 

ஜனாதிபதிக்கு நாங்கள் சந்திக்க வந்துள்ளதாக பொலிஸார் எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்து இருந்தனர். 

ஆனால் நிகழ்வின் இறுதி வரையில் எங்களை சந்திக்கவில்லை. இங்கே நாங்கள் காணாமல் போனோர் விடயமாக போராடிக்கொண்டு இருக்கின்றோம். 

அருட்தந்தை ஜிம்ரோன், அருட்தந்தை பிரான்சீஸ் இவர் இந்த கல்லூரியின் அதிபராக இருந்துள்ளார். 

ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவரோ, கல்லூரி நிர்வாகமோ ஜனாதிபதி முன்னிலையில் அது தொடர்பில் பேசவில்லை. 

ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என அரசியல் தலைவர்கள் கல்லூரி நிர்வாகம் கேட்டு இருக்க வேண்டும்.

ஆனால் அது தொடர்பில் எவரும் பேசவில்லை. இந்த கூட்டத்தின் இறுதிவரையில் நாங்கள் காத்திருந்தோம் ஜனாதிபதி எங்களை சந்திப்பார் என, ஆனால் இறுதிவரை எங்களை அவர் அழைத்து சந்திக்கவில்லை. 

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எங்களை அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம். எங்கள் மூவரை அழைத்து அவமானப்படுத்தியதாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதகவே கருதுகின்றோம் என தெரிவித்தார்.