எம்.எம்.மின்ஹாஜ்

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களில் இதுவரை கைது செய்யப்படாதவர்களை உடன் கைது செய்யுமாறும் இந்த வன்முறையின் போது கவனயீனமாக செயற்பட்ட பொலிஸாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அலரிமாளிகையில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பிற்கு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த சந்திப்பின் போது முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்தனர். இதன்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கும் போது,

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் இன்னும் பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். ஆகவே இவர்களை உடன் கைது செய்ய வேண்டும். இந்த விடயத்தில் துரிதமாக செயற்பட வேண்டும். 

மேலும் வன்முறையினால் சேதமைடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு வழங்குவதனை துரிதப்படுத்த வேண்டும். 

அத்துடன் இந்த வன்முறையின் போது பொலிஸார் மிகவும் கவனயீனமாக செயற்பட்டுள்ளனர். ஆகவே இது தொடர்பில் விசாரணை செய்து கவனயீனமாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக  உரிய சட்ட  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் வன்முறையின் ஏற்பட்ட பகுதிகளின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நன்றாக செவிமடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பிக்களின் கோரிக்கை விடயத்தில் விசேட அவதானம் செலுத்தினார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதிலை முன்வைக்கையில்,

கண்டி மாவட்டத்தின் திகன,தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமானவர்கள் பலரை கைது செய்துள்ளோம். எனினும் இன்னும் பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அதற்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தற்போது கண்டிக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் வன்முறையினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் சேத விபரங்களை தற்போது அளவிடப்பட்டு வருகின்றன. இதன்பின்னர் துரிதமாக சேதமைடந்த உடைமைகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிறகு நடத்துவோம் என கூறியுள்ளார்.

அத்துடன் இந்த வன்முறையின் போது கவனயீனமாக செயற்பட்ட பொலிஸார் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகள் முடிந்த பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து கண்டி சம்பவம் போன்று இனிமேலும் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறாமல் இருக்க அரசாங்க உரிய வேலைத்திட்டங்களை தயாரிக்க வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.