சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர், வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பையில்  பேக்கரித் தொழிலில் ஈடுபடும் 27 வயதுடைய திருமணமான முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வயோதிபரை நேற்று  இரவு மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார். 

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்  மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை ஒரு வித பதற்ற நிலை காணப்பட்டுள்ளது.

கண்டிப்  பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதம் போன்று மாதம்பை பகுதியிலும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுமோ என இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். 

எனினும் பொலிஸாரும், இராணுவத்தினரும் இப்பகுதியில்  பாதுகாப்பைப்  பலப்படுத்தியுள்ளனர். 

வயோதிபர்மீது தாக்குதலை மேற்கொண்ட முஸ்லிம் நபர் மாதம்பை பொலிஸாரினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தற்போது பொலிஸ் காவலில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளார்.