(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் இன்று மாலை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது.

இலங்கை தொடர்பான பரபரப்பான கருத்தாடல்களுக்கு மத்தியில் இன்றைய விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழ்மக்களின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முதலில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் உரையாற்றவிருக்கின்றனர். இதன்போது இலங்கையானது கடந்த நவம்பர்மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டுமென வலியுறுத்தப்படவுள்ளது. அத்துடன் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையிடம் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பவுள்ளனர்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ள அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை ஏன் இதுவரை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் தாமதத்தை வெளிக்காட்டுக்கின்றது என்ற கேள்வியை எழுப்பவுள்ளனர். அத்துடன் இலங்கை இந்த விடயத்தில் விரைந்து தனது அர்ப்பணிப்பை காட்டவேண்டுமென இந்த நாடுகள் வலியுறுத்தவுள்ளன.
அதேபோன்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளன. இதன்போது பொறுப்புக்கூறல் பொறிமுறையை சர்வதேச பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தவுள்ளன.
மேலும் இன்றைய தினம் ஜெனிவாவை வந்தடையவுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் கருத்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட தூதுக்குழுவினரும் இந்த விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர். இலங்கை அரசாங்கம் பூகோள காலக்கிம மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பதை அமைச்சர்கள் இருவரும் வெளியிடவுள்ளனர்.
இன்று ஜெனிவா வரவுள்ள அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் இன்றைய தினம் நடைபெறும் விவாதம் மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள விவாதம் ஆகிவற்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.