வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்த கல் ஆற்றில் இளம் பெண்ணொருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை பெண் ஒருவரின் சடலம் ஆற்றில் காணப்பட்டுள்ள நிலையில், பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தினை அடையாளம் காட்டுமாறு பிரதேசத்தின் பொதுமக்களின் ஒத்துழைப்பினை நாடியிருந்தனர்.

குறித்த பெண் வவுனியாவினை பிறப்பிடமாகவும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் திருமணம் புரிந்துகொண்டவருமான ராமலிங்கம் சுதர்சினி மாருதி வயது (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெணின் சடலத்தில் அருகில் காணப்பட்ட பையில் இருந்த  வெளிநாட்டு கடவுச் சீட்டினை கொண்டு மரணமடைந்தவர் தொடர்பான தகவலை பொலிசார் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த 16.03.2018 ஆம் திகதியன்று மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து கொழும்பு கட்டுநாயக்கா வந்துள்ளதாகவும் இந்நிலையில் அவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தமது ஊருக்கு வரும் வழியில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கிலாம் என பெண்ணின்  மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் பல கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.