ஓமலூரில் நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தன்னையும் நிர்வாண பூஜை செய்யமாறு வற்புறுத்தியதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்நிலையில், மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த விதவைப்பெண் கார்த்திகாவை செல்வராஜ் 2ஆவது திருமணம் செய்துள்ளார்.

திருமணம் நடைபெற்று ஒரு வருடத்தின் பின்னர் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் கணவர் வெளியே சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

ஆயினும், செல்வராஜ் நாளடைவில் தனது வீட்டில் ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்ய ஆரம்பித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மருத்துவராகிய நீங்கள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆயினும் அவர் கேட்கவில்லை.

தொடர்ந்து அவர் நிர்வாண பூஜை செய்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாத கார்த்திகா கணவரின் ஆதரவில் வாழ்ந்து வருவதால் அவர் ஏதோ ஒன்றை செய்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமலும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மனைவி கார்த்திகாவையும் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்று செல்வராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கார்த்திகா உடன்படாததால் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கு கார்த்திகா சென்றுள்ளார்.

இந் நிலையில் செல்வராஜ் காரத்திகாவிடம் விவாகரத்து கோரியுள்ளார். இதை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நிர்வாண பூஜையில் இருந்த கணவனை பார்த்து இனி சேர்ந்து வாழலாம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், என்னுடன் வாழ வேண்டும் என்றால் நான் கூறுவது போல் நீயும் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றும் செல்வராஜ் மிரட்டியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட தகராரில் காயம் அடைந்த கார்த்திகா ஓமலூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.