கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை பிழையாக பயன்படுத்தி தேசிய ஐக்கியத்திற்கு பாதகமான வகையில் நாடளாவிய ரீதியில் இனவாதத்தையும் வன்முறையையும் தூண்டி வன்முறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதை தவிர்க்கும் நடவடிக்கையாக சில சமூக ஊடகங்களுக்குள் பிரவேசிப்பதை தற்காலிகமாக மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இனவாதம், மதவாதம் அல்லது பல்வேறு அடிப்படை வாதங்களை அடிப்படையாகக்கொண்டு வன்முறை நடத்தைகள் வேகமாக பரவுவதற்கு சமூக ஊடகங்களின் தாக்கம் சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடாக தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த சமூக ஊடகங்களின் மீதான தடை காரணமாக கலவரம் மற்றும் வன்முறைகள் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது.

தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு ஏற்ப தேவையான ஒழுங்குபடுத்தல், பாதுகாப்பு மற்றும் சரிபார்த்தல் ஏற்பாடுகளை மேற்கொண்டதன் பின்னர் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த வைபர் ஊடகம் நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஆராய்ந்து, இன்று முதல் வட்ஸ் அப் சேவைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சமூக ஊடகங்களை பிழையாகப் பயன்படுத்தி இனவாதத்தை தூண்டி மக்களின் வாழ்க்கையை குழப்புவதற்கும், தனிப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துதல் போன்றவற்றின் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில் பேஸ் புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நாளைய தினம்  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 

அந்த வகையில் மிக விரைவில் பேஸ் புக் சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் நாட்டில் அமைதியின்மையை மீண்டும் உருவாக்குவதற்கு இடமளிக்காது மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இத்தகைய செயற்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.