அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பின் (USAID) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரீட் ஜே ஏஸ்கிலிமன் 2018 மார்ச் 5 ஆம் திகதி தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக 4.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தருணத்திலேயே ஏஸ்கிலிமனின் வருகையும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் ஆரம்பமாகி 70 வருடங்களாவதை நாங்கள் கொண்டாடும் இந்த தருணத்தில் ஏஸ்கிலிமன் அமெரிக்க தூதரகத்துடன் இணைந்திருப்பது எங்களின் அதிர்ஷ்டம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பின் அபிவிருத்தி உதவிகளை நிர்வகிப்பதில் அவருக்குள்ள  வலுவான அனுபவங்கள் காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவு மக்கள் நன்மையடைவார்கள் எனவும் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிராந்திய பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்யும் மனித உரிமைகளின் அடிப்படைகளையும் அனைவருக்கும் சமத்துவத்தையும் உறுதிசெய்யும் நல்லிணக்கம், சமாதானம், வளம் மற்றும் ஜனநாயகம் நிலவும் நாடாக விளங்கவேண்டும் என்ற எங்கள் இணைந்த இலக்குகளுக்கு ஆதரவாக அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் நிதி புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்தப்படுவதையும் அவர் உறுதிசெய்வார் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்வது, கரையோர வளங்களை பாதுகாப்பது, அரசாங்க ஸ்தாபனங்களின் செயல்திறனை அதிகரிப்பது உட்பட பல்வேறுபட்ட முயற்சிகளிற்கு யூஎஸ்எயிட் 2011 முதல் மாலைதீவுக்கு ஆதரவளித்து வருகின்றது.

1956 முதல் இலங்கைக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவியாக அமெரிக்க அரசாங்கம் 2 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய மதிப்பில் ஏறக்குறைய 300 பில்லியன் ரூபா) வழங்கியுள்ளது.

இந்த உதவிகள் இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் நன்மையை அளித்துள்ளன. இந்த உதவிகள் அனைவரையும் உள்ளளடக்கிய பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி சீர்திருத்தங்கள் மனிதாபிமான நெருக்கடிகளில் இருந்து மீளுதல் போன்ற விடயங்களில் அர்த்தமுள்ள தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் அபிவிருத்தி உதவியை மேலும் செயலூக்கம் மிக்கதாக மாற்றுவதற்கும் உதவிகள் எந்த மக்களிற்கு அதிகம் தேவையாகவுள்ளதோ அவர்களிற்கு அதனை வழங்குவதற்கும்  அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுபங்காண்மையை வலுப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் என ரீட் ஜே ஏஸ்கிலிமன் தெரிவித்துள்ளார்.

ரீட் ஜே ஏஸ்கிலிமன் 2000 ஆண்டு முதல் யூஸ்எயிட் இல் பணியாற்றிவருவதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் பசுபிக் தீவுகள், ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா போன்ற நாடுகளில் பணிபுரிந்துள்ளார். மேலும், அவர் பொருளாதாரம், ஜனநாயக ஆட்சி, சூழல், கல்வி உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலையும் சிறப்பாக முகாமைத்துவம் செய்துள்ளார்.

சமீபத்தில் வொஷிங்டனில் ஆசியாவிற்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகியாக அவர் பணியாற்றியுள்ளார்.