ஏமன் நாட்டில் இராணுவ சமையல் கூடத்தின்மீது நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில்  4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்தப் போரில் அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.  தலைநகர் ஏடனில் அல் டெராயின் பகுதியில் ஏமன் படையினருக்கும், சவுதி அரேபிய கூட்டுப்படையினருக்கும் உணவு சமைக்கிற இராணுவ சமையல் கூடம் உள்ளது.

அங்கு நேற்று சமையல் கலைஞர்கள் சமையலில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் ஓட்டிச்சென்று அந்த சமையல் கூடத்தின்மீது மோதியுள்ளார்.

குண்டுகள் வெடித்ததில் சமையல்கூடம் தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கு சமையலில் ஈடுபட்டு இருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து கருகி விட்டதாக மீட்பு படையினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த கார் குண்டு தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை