நாட்டில் ஏற்றபட்ட வன்முறைச் சம்பவங்களையடுத்து சமூக வலைத்தளங்களை தேசிய பாதுகாப்பு கருதி அரசாங்கம் முடக்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த சமூக வலைத்தளங்களில் ஒன்றான வைபருக்கான (Viber) தடையை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வைபருக்கான தடை நீக்கம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் சமூக வலைத்தள பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கலவரம் தூண்டப்பட்டமை மற்றும் வன்முறைகள் போன்றன வேகமாக பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுடன் நாட்டின் தேசிய பாதுகாப்பை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையால், வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளும் கடந்த நாட்களாக பல்வேறு அசௌகரியத்திற்குள்ளானமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு முதல்கட்ட நடவடிக்கையாக வைபர் சமூக வலைத்தளத்துக்கு விதிக்கப்பட்டிருநு்த தற்காலிக தடையை இன்று நள்ளிரவு முதல் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய சமூக வளைத்தளங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர்,  தற்காலவிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

அரசாங்கத்தினர், சமூக வலைத்தள சேவை வழங்குநர்கள் மற்றும் சமூக வலைத்தள பாவனையாளர்கள் உள்ளிட்ட நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக சிரமங்களை எதிர்நோக்கியவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவலையை வெளியிட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளஊடக அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் போன்ற ஏனைய சமூக வலைத்தளங்களுக்கான தடையும் நீக்கப்படுமென அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.