இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்ப விருத்திக்கென இந்திய அரசு 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது. 

கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் சர்வதேச சூரிய சக்தி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூரிய சக்தி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சர்வதேச ரீதியாக 46 நாடுகளை ஒன்றிணைத்த வகையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அபிவிருத்தி வங்கி தலைவர்கள், புதுப்பிக்கத்தக்க சக்திவள வர்த்தக தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இம்மாநாட்டின் போது சூரிய சக்தி தொழில்நுட்ப  மாநாட்டு திட்டங்கள் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. 

இந்தியாவின் நிதியுதவியின் கீழ் 15 நாடுகளுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 

இதன்படி இலங்கைக்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்திற்கென 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்மூலம் 200 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான சூரிய சக்தி தொழில்நுட்பம் மற்றும் அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்தை நிறுவுதல் என்பன இம்முதலீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இம்மாநாட்டின் போது இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி சூரிய சக்தி திட்டத்தினால் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஏற்பட்ட நேர்மறையான காலநிலை மாற்றத்தை நினைவு கூர்ந்தார். 

அனைத்து நாடுகளும் தமது சக்திவலு தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்பேற்படுத்தல், பொதுவான கட்டமைப்பு ஒன்றின் மூலமாக ஒன்றிணைந்து  செயற்படல், சூரிய சக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை விருத்தி செய்தல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக  கொண்டு சூரிய சக்தி மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.