இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 9 ஆவது தடவையாக நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  கொழும்பு இந்துக் கல்லூரி அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேஷ் 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்.இந்துக்கல்லூரி அணி 68.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிக பட்சமாக கஜனத் 53 ஓடட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 168 ஓட்டங்களால் பின்தங்கிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 74 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வருவதாக நடுவரினால் அறிவிக்கப்பட்டதையடுத்து 9 ஆவது தடவையாக இடம்பெற்ற இந்துக்களின் சமரும் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.